இந்திய தொலைத் தொடர்பு துறையில் நிலவி வரும் கடுமையான போட்டிக்கு மத்தியில், பல்வேறு சவால்கள் நிலவி வருகின்றன. குறிப்பாக ஜியோவின் வருகைக்கு பிறகு கடும் போட்டி நிலவி வருகின்றது எனலாம்.
இந்த நிலையில் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் பலவும் சந்தையை விட்டு வெளியேறின. இருக்கும் சில நிறுவனங்களும் கடன் பிரச்சனையிலும், பலத்த போட்டிகளுக்கு மத்தியிலும் போராடி வருகின்றன.
எனினும் நிதி திரட்டல், கட்டண அதிகரிப்பு, அரசின் ஒத்துழப்பு என பல காரணிகளுக்கு மத்தியில் ஓரளவுக்கு தற்போது மீண்டு வந்து கொண்டுள்ளன. இந்த நிலையில் 5ஜி சேவை குறித்தான பேச்சு வார்த்தை எழுந்துள்ளது. இது தொலைத் தொடர்பு துறையினை அடுத்த தலைமுறையினருக்கு எடுத்து செல்லும் ஒரு வழியாக உள்ளது.
தமிழ்நாடு அரசின் அடுத்த சிக்ஸர்.. செமிகண்டக்டர் உற்பத்தியில் கலக்க பலே திட்டம்!
நிதி திரட்டும் முயற்சி
இப்படி பல்வேறு சவால்களுக்கும் மத்தியில் ஜியோ, ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகின்றன. இந்த போட்டிகளை சமாளிக்க நிறுவனங்கள் கடுமையான முயற்சிகளை எடுத்து வருகின்றன, அந்த வகையில் பார்தி ஏர்டெல் (Bharti airtel) நிறுவனமும் கடும் சவாலான நிலைக்கு மத்தியில், நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது.
சிசிஐ அனுமதி
இது குறித்து கூகுள் நிறுவனத்துடனும் ஏர்டெல் பேச்சு வார்த்தை நடத்தி வந்தது. கூகுள் முதலீடு குறித்து இந்திய போட்டி ஆணையம் (CCI)யிடம் அனுமதி கோரியும் இருந்தது. இந்த நிலையில் சிசிஐ இந்த பரிவர்த்தனைக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
எவ்வளவு முதலீடு?
கூகுள் நிறுவனம், டெலிகாம் சேவை நிறுவனமான பார்தி ஏர்டெல் நிறுவனத்தில் இந்திய டிஜிட்டல் கட்டமைப்பினை மேம்படுத்த 1 பில்லியன் டாலர் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. இதில் கூகுள் நிறுவனம் 300 மில்லியன் டாலர் அளவிலான தொகையைப் பல வருட வர்த்தக ஒப்பந்தங்கள் வாயிலாக அளிக்க உள்ளது. இதே 700 மில்லியன் டாலர்களை ஈக்விட்டி முதலீடு மூலம் முதலீடு செய்யவுள்ளது.
ஜியோவில் எவ்வளவு முதலீடு?
இதன் மூலம் ஜியோ முதலீடு செய்தது போல, பார்தி ஏர்டெல் நிறுவனத்திலும் கூகுள் முதலீடு செய்யவுள்ளது. ஏற்கனவே கூகுள் நிறுவனம் கடந்த ஜூலை 2020ல் ஜியோவில் 4.5 பில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளது. இதன் மூலம் 7.73% பங்கினை ஜியோ நிறுவனத்தில் கையகப்படுத்துள்ளது.
என்ன செய்ய திட்டம்?
பார்தி ஏர்டெல் – கூகுள் கூட்டணி மூலம் இந்தியாவில் மலிவு விலையில் ஸ்மார்ட்போன் அறிமுகம், 5ஜி சேவை, இதர டெலிகாம் சேவைகளை வழங்கலாம் என கூறப்படுகிறது. அதேபோல் இந்தியாவில் கிளவுட் சேவையை மேம்படுத்துவதிலும் ஏர்டெல், கூகுள் இணைந்து செயல்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. எனினும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
இந்த ஒப்பந்தம் போல முதலீடுகள் செய்யப்பட்டால், அது ரிலையன்ஸ் ஜியோவின் புதிய தலைவர் ஆகாஷ் அம்பானிக்கும் சவாலான ஒரு விஷயமாக இருக்கும்.
CCI approved google’s proposed acquisition of 1.28% stake in Airtel
Competition Commission Of India approves Google’s proposed acquisition of 1.28% stake in Bharti Airtel