முதல் தமிழ் பைபிள்:
கிறிஸ்தவ மதபோதகர் பர்த்தலோமியு ஜீகன்பால்க் (Bartholomäus Ziegenbalg) ஜெர்மன் நாட்டை சேர்ந்தவர். இவர், டென்மார்க்கின் மன்னர் நான்காம் ஃபிரடெரிக்கின் ( King Frederick IV) உத்தரவின் பேரில் கடந்த 1707-ம் ஆண்டு இந்தியாவில் தமிழ்நாட்டுக்கு வந்தடைந்தார். தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் வந்த ஜீகன்பால்க் தமிழ் மொழியைக் கற்கத் தொடங்கினார். மேலும், இங்குள்ள மதம் மற்றும் கலாசாரங்கள் குறித்து எழுதத் தொடங்கினார். கிறிஸ்தவ அறிவை ஊக்குவிக்கும் சங்கத்தின் (Society for Promoting Christian Knowledge-SPCK) உதவியுடன் தரங்கம்பாடியில் ஒரு அச்சகத்தையும் நிறுவினார்.
1711-ம் ஆண்டு காலகட்டத்தில் பைபிள் புதிய ஏற்பாட்டை ஜீகன்பால்க் தமிழில் மொழிபெயர்த்து முடித்திருந்தார். அதிலிருந்த அனைத்து திருத்தங்களும் முடிக்கப்பட்டு தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட பைபிள் 1714-ம் ஆண்டு அச்சிடப்பட்டது. இந்தநிலையில், ஜீகன்பால்க் 1719-ம் ஆண்டு மறைந்தபிறகு அந்த நூலானது தஞ்சை சரபோஜி மன்னருக்குப் பரிசாக வழங்கப்பட்டது. காலப்போக்கில் அந்த நூலானது, தஞ்சை சரஸ்வதி மகால் நூலக அருங்காட்சியகத்தில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்ததது.
திருடப்பட்ட பைபிள்:
அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த இந்த அரியவகை புத்தகம், கடந்த 2005-ம் ஆண்டு அக்டோபர் மாதம் காணாமல் போனது. இதனையடுத்து, தஞ்சை சரஸ்வதி மகால் நூலக அருங்காட்சியகத்தின் நிர்வாக அலுவலர் தஞ்சை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அப்போது, அந்த புத்தகம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், கண்டுபிடிக்க முடியாத வழக்காக முடித்துவைக்கப்பட்டிருந்தது. இந்த சூழலில்தான், கடந்த 2017-ம் ஆண்டு வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் இந்த பைபிள் திருட்டுப் போனது குறித்துச் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையில் புகார் செய்திருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவுசெய்து, காணாமல் போலப் பைபிள் குறித்துச் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், 2005-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 10-ம் தேதி அந்த புத்தகம் காணாமல் போனது. அதற்கு மூன்று நாள்களுக்கு முன்பாக அந்த அருங்காட்சியகத்துக்கு சில வெளிநாட்டினர் வந்து சென்றுள்ளனர். மேலும், அந்த வெளிநாட்டினர், ஜீகன்பால்க் தொண்டு செய்த இடங்களைப் பார்வையிட வந்ததும் காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்தது. வெளிநாட்டினர் வந்து சென்ற பிறகுதான் அந்த புத்தகம் திருடப்பட்டுள்ளது.
லண்டனில் சிக்கிய பைபிள்:
இந்த தகவலையடுத்து, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு தனிப்படையினர் தொடர்ந்து பல்வேறு பகுதிகளிலும் அந்த பைபிளை தேடி வந்தனர். அப்படித் தேடும்போதுதான், லண்டனில் உள்ள கிங்ஸ் கலெக்ஷன்ஸ் என்ற நிறுவனத்தின் வலைதளத்தில், சரபோஜி மன்னரின் கையெழுத்தோடு கூடிய அந்த பைபிள் இருப்பது கண்டறியப்பட்டது. மேலும், அந்த பைபிள், சரஸ்வதி மகால் நூலகம் அருங்காட்சியகத்திலிருந்து காணாமல் போன பைபிள் என்பதும் உறுதிசெய்யப்பட்டது.
இதனையடுத்து, அந்த பைபிளைத் தமிழ்நாட்டிலிருந்து திருடுச் சென்றது யார், அந்த புத்தகம் எப்படி கிங்ஸ் கலெக்ஷன்ஸ் நிறுவனத்துக்குச் சென்றது என்பது குறித்தும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். அதே வேளையில், யுனெஸ்கோ ஒப்பந்தத்தின்படி, அந்த புத்தகத்தை இந்தியாவுக்கு மீட்டுக் கொண்டுவருவதற்கான பணிகளும் தொடங்கியிருக்கிறது. விரைவில் விலை மதிக்கமுடியாத அந்த பைபிள் தமிழ்நாட்டுக்கு மீட்டுவரப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.