8 கி.மீ., துாரம் காட்டுப் பாதையில்கர்ப்பிணியை சுமந்து சென்ற அவலம்| Dinamalar

சாம்ராஜ் நகர்:கர்ப்பிணியை மருத்துவமனையில் சேர்க்க, கிராமத்தினர் துணி தொட்டிலில், 8 கி.மீ., துாரம் காட்டுப்பாதையில் சுமந்து சென்ற ‘வீடியோ’ வேகமாக பரவி வருகிறது.
கர்நாடக மாநிலம், சாம்ராஜ் நகர், மலை மஹாதேஸ்வரா மலையின் வனப்பகுதியை ஒட்டியுள்ளது தொட்டானி கிராமம். தொலைவிலுள்ள வனப்பகுதி கிராமங்களுக்கு, எந்த போக்குவரத்து வசதியையும், அதிகாரிகள் செய்து தரவில்லை. மூத்த குடிமக்கள், சிறு பிள்ளைகள், கர்ப்பிணியர், பெண்களுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டால், மருத்துவமனைக்கு செல்வது பெரும் தொந்தரவாக உள்ளது.தொட்டானி கிராமத்தில் வசிக்கும் சாந்தலா, 25, என்பவர் கர்ப்பமாக இருந்தார். சில நாட்களுக்கு முன், இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது.

கிராமத்தில் மருத்துவமனை, ஆரம்ப சுகாதார மையம் இல்லை. தொலைவிலுள்ள மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். கிராமத்தில் யாரிடமும், சொந்த வாகனம் இல்லை. இதனால் கிராமத்தினரும், உறவினர்களும் துணி மற்றும் கம்புகளால் தொட்டில் தயாரித்து, அதில் கர்ப்பிணியை படுக்க வைத்து, 8 கி.மீ., காட்டுப்பாதையில் நடந்து, சுல்வாடியில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் சேர்த்தனர்.

அவருக்கு சுகப்பிரசவம் நடந்தது.கிராமத்தினர் நடந்து வந்த காட்டுப்பாதை, யானைகள் உலாவும் இடம். புலி, சிறுத்தை, காட்டுப்பன்றி போன்ற வன விலங்குகளும் நடமாடும். விலங்குகள் பயத்துடன், உயிரை கையில் பிடித்துக் கொண்டு, நள்ளிரவு 1:00 மணிக்கு பயணத்தை துவங்கி, அதிகாலை 6:00 மணியளவில், மருத்துவமனையை வந்தடைந்தனர். கிராமத்தினர் காட்டுப் பாதையில் கர்ப்பிணியை சுமந்து சென்ற வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.