கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூ. அலுவலகம் மீது வெடிகுண்டு வீச்சு: போலீஸ் குவிப்பால் பதற்றம்

திருவனந்தபுரம்: கேரளாவில் மார்க்சிஸ்ட் தலைமை அலுவலகமான, ‘ஏகேஜி சென்டர்’ மீது வெடிகுண்டு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கேரளாவில் தூதரகம் மூலமாக நடந்த தங்கம் கடத்தலில் முதல்வர் பினராய் விஜயன், அவரது குடும்பத்தினருக்கும் தொடர்பு இருப்பதாக, முக்கிய குற்றவாளியான சொப்னா கூறியதை தொடர்ந்து, கடந்த 2 வாரங்களுக்கு மேலாக பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. பினராய் விஜயன் பதவி விலகக் கோரி  காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சில தினங்களுக்கு முன் வயநாட்டில் உள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவரான ராகுல்  காந்தியின் எம்பி அலுவலகத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பினர் அடித்து நொறுக்கியது பதற்றத்தை மேலும் அதிகரித்தது. பிறகு கேரளா முழுவதும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்களுக்கு பலத்த பாதுகாப்பு  போடப்பட்டது. இந்நிலையில், திருவனந்தபுரத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகமான ‘ஏகேஜி  சென்டர்’ மீது, நேற்று முன்தினம்  நள்ளிரவில் பைக்கில் வந்த மர்ம நபர் வெடிகுண்டை வீசிவிட்டு தப்பிச் சென்றார். சுவர் மீது வெடிகுண்டு விழுந்ததால் சேதம் எதுவும் ஏற்படவில்லை. இருப்பினும், போலீசார் குவிக்கப்பட்டனர். முதல்வர் பினராய் விஜயன் சம்பவ இடத்தை பார்வையிட்டார். வெடிகுண்டு வீசப்பட்டதை கண்டித்து கேரள முழுவதும் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முதல்வர் பினராய் விஜயன், அமைச்சர்கள்,  காங்கிரஸ் மாநில தலைவர் சுதாகரன், எதிர்க்கட்சித் தலைவர் சதீசன்   ஆகியோருக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. இந்திரா காந்தி சிலை சேதம்மார்க்சிஸ்ட்  தலைமை அலுவலகம் தாக்கப்பட்டதை கண்டித்து நேற்று முன்தினம் இரவு மாநிலம் முழுவதும் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் குதித்தனர்.  ஆலப்புழாவில் நடந்த போராட்டத்தின்போது அங்குள்ள தபால் அலுவலகம், இந்திரா காந்தியின் சிலையை போராட்டக்காரர்கள் சேதப்படுத்தினர். மேலும், தேசிய  நெடுஞ்சாலையில் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.