மதுரை: தங்கள் குழந்தைகளை நல்ல முறையில் வளர்க்க வேண்டும் என்பது பெற்றோரின் கனவு. ஆங்கிலத்தில் ஒரு சொல் உண்டு ‘லைம் லைட்’, அதாவது சமுதாயத்தில் உள்ள அனைவரின் கவனமும் ஒருவர் மீது விழுவது.
அந்த ‘லைம் லைட்டு’க்குள் தங்கள் குழந்தைகள் வேகமாக வரவேண்டும் என பெற்றோர் எதிர்பார்க்கிறார்கள்.
அதற்காகத்தான் சிறு குழந்தைகள் வீட்டில் செய்யும் சிறு, சிறுசேட்டைகளைகூட பதிவு செய்துசமூக ஊடகங்களில் வைரலாக்குகிறார்கள்.
அதை பலரும் ரசிக்கிறார்கள். அதை பகிரவும் செய்கிறார்கள். இதில் தவறு இல்லை. மற்றவர்கள் அந்த வீடியோக்களை பார்த்து உங்கள் குழந்தைதானே எனக் கேட்டால் மகிழ்ச்சி அடைகிறார்கள்.
புரியாத வயதில் குழந்தைகளுக்கு அது சந்தோஷம். அதன்பிறகு அதுபோன்ற பல புதிய வீடியோக்களை பதிவேற்றி தங்கள்குழந்தைகள் யூ-டியூப் போன்ற சமூக வலைத்தளங்களில் பிரபலமடைய வேண்டும் என இன்றைய பெற்றோர் விரும்புகின்றனர்.
காலப்போக்கில் அது நடக்காத பட்சத்தில், அந்தக் குழந்தைகள் மகிழ்ச்சியை இழந்து, கல்வியில் நாட்டமில்லாமல் மன அழுத்தத்துக்கு ஆளாகிறார்கள். அது அவர்களின் எதிர்காலத்தை பாதிக்கிறது. தற்போது இதுபோன்று பாதிப்படையும் குழந்தைகளை மனநல ஆலோசனைக்கு அழைத்து வருவது அதிகரித்துள்ளது.
மதுரை கே.கே.நகரை சேர்ந்தமனநல ஆலோசகர் ப.ராஜசவுந்தரபாண்டியன் கூறியதாவது: தங்கள்குழந்தைகள் மருத்துவர் அல்லதுபொறியாளர் ஆக வேண்டும் என ஆசைப்பட்டதை தாண்டி,இப்போது சிறு வயதிலேயே யூ-டியூபில் பெரிய ஆளாக வேண்டுமென ஆசைப்படுகிறார்கள்.
ஆரம்பத்தில் அதில் சிறிய வெற்றி கிடைத்தாலும் ஒரு காலகட்டத்தில் அவர்களின் வீடியோவுக்கு எதிர்மறையான விமர்சனம் வரத் தொடங்குகிறது. சிலர் இழிவான கருத்துகளை பதிவிடும்போதுதான் பிரச்சினையின் வீரியம் பெற்றோருக்கு புரிய ஆரம்பிக்கிறது.
இதில் பெற்றோர் தெரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயம் குழந்தையை ஏதாவது ஒரு விஷயத்தில் பிரபலம் ஆக்க வேண்டுமெனில் அவர்களுக்கு நேர்மறை மற்றும் எதிர்மறை விஷயங்களை கற்றுத்தர வேண்டும். குறிப்பாக யூ-டியூப்-ல்அனைவரும் நேர்மறையான கருத்துகளை மட்டும் பதிவுசெய்வர் என்பது தவறான புரிதலாகும்.
நிறைய குழந்தைகளுக்கு யாராவது தங்கள் வீடியோக்களை நிராகரித்தால் (டிஸ்லைக்) அதை தாங்கிக்கொள்ள முடியவில்லை. இதை முதலில் குழந்தைகளுக்கு புரிய வைக்க வேண்டும். குழந்தைகள் எளிதில் மனம் உடைய முக்கியக் காரணம் பெற்றோரின் வளர்ப்பு முறைதான்.
தோல்வி, அவமானம், நிராகரிப்பு மற்றும் ஏமாற்றம் போன்றவற்றை கற்றுத்தர பெற்றோர் தயங்குகிறார்கள். இவற்றை தெரியாத ஒருவர் வாழ்க்கையில் வெற்றிபெறுவது சாத்தியமற்றது. இவற்றையும் கற்றுத் தந்தால் எந்த ஒரு விஷயத்தையும் சுலபமாக சமாளித்து அதில் வெற்றி காண்பர்.
இவ்வாறு அவர் கூறினார்.