சண்டிகர்: காங்கிரசில் இருந்து விலகி புதிய கட்சி தொடங்கிய பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங், தனது கட்சியை பாஜ.வுடன் இணைத்து விட்டு அக்கட்சியில் சேர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்தவர் கேப்டன் அமரீந்தர் சிங் (89). நவஜோத் சிங் காரணமாக கட்சியில் ஏற்பட்ட உட்கட்சி பூசலால், இவர் கடந்த ஆண்டு பஞ்சாப் மாநில முதல்வர் பதவியில் இருந்து விலகினார். பின்னர் காங்கிரசில் இருந்தும் விலகினார். தொடர்ந்து, ‘பஞ்சாப் லோக் காங்கிரஸ்’ என்ற புதிய கட்சியை தொடங்கி, கடந்த ஏப்ரலில் நடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜ.வுடன் கூட்டணி வைத்து தேர்தலில் போட்டியிட்டார். ஆனால், பட்டியாலா தொகுதியில் போட்டியிட்ட அவர், படுதோல்வி அடைந்து டெபாசிட் இழந்தார். பாஜ.வுடன் கூட்டணி வைத்து போட்டியிட்ட நிலையில், தற்போது அவர் பாஜ.வில் தனது கட்சியை இணைக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதுகில் அறுவை சிகிச்சை செய்வதற்காக அமரீந்தர் லண்டன் சென்றுள்ளார். இந்நிலையில், லண்டனில் இருந்து திரும்பிய பிறகு, தனது பஞ்சாப் லோக் காங்கிரசை பாஜ.வில் இணைத்து விட்டு, தானும் அக்கட்சியில் இணைத்துக் கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.