ஜிஎஸ்டி மூலம் ஒரே நாடு ஒரே வரி லட்சியம் நிறைவேற்றம் – பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்

புதுடெல்லி: ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டு ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், ஜிஎஸ்டி இந்தியாவின் தொழில் செயல்பாட்டை எளிதாக்கியுள்ளது என்றும் ஜிஎஸ்டி மூலம் ‘ஒரே நாடு ஒரே வரி’ என்ற லட்சியம் நிறைவேறியுள்ளது என்றும் பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இந்தியா முழுமைக்கும் ஒரே வரி விதிப்பு முறையைக் கொண்டு வரும் நோக்கில் மத்திய அரசு 2017 ஜூலை 1 அன்று சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) அறிமுகம் செய்தது. ஜிஎஸ்டி விகிதம் 5%,12%,18%,28% என நான்கு அடுக்குகளாக பிரிக்கப்பட்டு மத்திய, மாநில அரசுகளின் வெவ்வேறு வரி விகிதங்கள் அனைத்தும் ஜிஎஸ்டிக்கு கீழ் கொண்டுவரப்பட்டன.

நேற்றுடன் ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டு ஐந்து ஆண்டுகள் முடிந்துள்ள நிலையில் ஜிஎஸ்டி குறித்து பிரதமர் மோடி தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் “ஜிஎஸ்டி மிகப் பெரும் வரி சீர்திருத்தமாகும். தொழில் செயற்பாட்டை அது எளிதாக்கியுள்ளது. ‘ஒரே நாடு ஒரே வரி’ என்ற லட்சியத்தை நிறைவேற்றியுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்ட போது, ஜிஎஸ்டியால் மாநில அரசுகளுக்கு ஏற்படும் வரி வருவாய் இழப்பை ஈடுகட்ட ஐந்து ஆண்டுகளுக்கு மத்திய அரசு இழப்பீடு வழங்கும் என்றும் உறுதியளிக்கப்பட்டது. ஆனால், இன்னும் பல மாநிலங்கள் ஜிஎஸ்டியால் வரி இழப்பைச் சந்தித்து வருகின்றன. இதனால், இழப்பீடு வழங்கும் காலகட்டத்தை மேலும் சில ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என்று மாநிலங்கள் கோரிக்கை வைத்துள்ளன.

கடந்த வாரம் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சிலின் 47-வது கூட்டத்தில், இழப்பீடு காலத்தை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அனைத்து மாநிலங்களும் வலியுறுத்தின.

ஆனால், அது தொடர்பான முடிவு இந்தக் கூட்டத்தில் எடுக்கப்படவில்லை. ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ள அடுத்த கூட்டத்தில் முடிவு அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

மதுரையில் அடுத்த கூட்டம்

அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மதுரையில் ஆகஸ்ட் முதல் வாரத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தமிழ்நாட்டில் நடைபெற இருக்கும் முதல் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

பிஎஸ்எல்வி சி53

இஸ்ரோ நிறுவனம் வர்த்தக ரீதியில் பிஎஸ்எல்வி சி53 ராக்கெட் மூலம் 3 சிங்கப்பூர் செயற்கைகோள்களை விண்ணில் ஏவியது. அதோடு பிஎஸ்எல்வி ராக்கெட் ராக்கெட்டின் இறுதி பாகமான பிஎஸ் 4-ஐ பூமியை சுற்றும் பரிசோதனை தளமாக (POEM) இஸ்ரோ பயன்படுத்தியது. இதில் அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்ள 6 கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன.

இதில் 2 கருவிகள், இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ‘டிகான் தாரா’ மற்றும் ‘துருவ் ஸ்பேஸ்’ ஆகியவற்றின் தயாரிப்புகள். இது இன்-ஸ்பேஸ் மற்றும் நியூ ஸ்பேஸ் இந்திய நிறுவனம் (எஎஸ்ஐஎல்) மூலம் சாத்தியமானது.

இது குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, ‘‘விண்வெளியில், இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் இரு கருவிகளை ஏவி பிஎஸ்எல்வி சி53 புதிய சாதனை படைத்துள்ளது. இதற்காக இன்-ஸ்பேஸ் இந்தியா மற்றும் இஸ்ரோவுக்கு வாழ்த்துக்கள். எதிர்காலத்தில் இன்னும் அதிக அளவிலான இந்திய நிறுவனங்கள் விண்வெளியை சென்றடையும் என நம்புகிறேன்’’ என கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.