கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே சூரியகோடு முளங்குழியை பகுதியை சேர்ந்தவர் ஜான் ஐசக் (40). இவருக்கும் சந்தியா (34) என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. ஜான் ஐசக் – சந்தியா தம்பதிக்கு திருமணம் ஆகி பத்து ஆண்டுகள் ஆன நிலையில் குழந்தை இல்லை என்பதால் இவர்கள் கவலையில் இருந்ததாக கூறப்படுகிறது. ஜான் ஐசக் முதலில் சென்னையில் வேலை செய்துவந்தார். பின்னர் சொந்த ஊரில் பிளம்பர் வேலை செய்து வந்துள்ளார். அப்போது ஜான் ஐசக் மாதக்கணக்கில் வேலைக்குச் செல்லாமல் இருந்துள்ளார். இந்த நிலையில் மார்த்தாண்டத்தில் ஒது தனியார் வங்கியில் வேலைக்கு சென்று வந்துள்ளார் சந்தியா. அப்போது தனது கணவன் ஜான் ஐசக்குக்கு தெரியாமல் அழகன்பாறை பகுதியைச் சேர்ந்த ஆன்றோ பிரப்ளின் என்பவரிடம் முப்பது லட்சம் ரூபாய் கடன் வாங்கியதாக தெரிகிறது.
இந்த நிலையில் சந்தியாவின் வீட்டுக்குச் சென்ற ஆன்றோ கொடுத்த பணத்தை திருப்பி கேட்டுள்ளதாக தெரிகிறது. அப்போதுதான் சந்தியா கடன் வாங்கிய விஷயம் ஜான் ஐசக்குக்கு தெரியவந்திருக்கிறது. இதனால் கணவன், மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே கோட்டூர்கோணத்தில் உள்ள சந்தியாவின் தாய் சாந்தி வீட்டுக்குச் சென்ற ஆன்றோ, அவரின் மகள் 30 லட்சம் ரூபாய் தரவேண்டும் என்றும், இல்லையென்றால் போலீஸில் புகார் அளிப்பேன் எனவும் கூறியிருக்கிறார்.
இதையடுத்து சாந்தி தனது மகள் சந்தியாவுக்கு போன் செய்துள்ளார். அவர் போன் எடுக்காததால் நேற்று முன்தினம் இரவு சந்தியாவின் வீட்டுக்குச் சென்றுள்ளார். வீடு பூட்டப்படிருந்தது, கதவை தட்டியும் திறக்கவில்லை. ஜன்னல் வழியாக பார்த்தபோது பெட் ரூமில் சந்தியா தூக்கில் தொங்கிய நிலையிலும், ஜான் ஐசக் வாயில் நுரை தள்ளியபடியும் கிடந்துள்ளார். இதுகுறித்து குலசேகரம் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸார் அங்கு சென்று பார்த்தபோது இருவரும் உயிரற்ற நிலையில் கிடந்தது தெரிவந்தது. இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் விசாரித்தோம், “சந்தியாவின் கணவன் பிளம்பிங் வேலை செய்தபோது கீழே விழுந்ததால் வேலைக்கு செல்ல முடியாத நிலையில் இருந்துள்ளார். சந்தியா மார்த்தாண்டத்தில் ஒரு தனியார் வங்கியில் வேலைக்கு சென்றுவந்துள்ளார். அப்போது 31 வயது ஆன ஆன்றோவுடன் சந்தியாவுக்கு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. தனக்கு திருமணம் ஆகவில்லை எனக்கூறி ஆன்றோவிடம் சந்தியா நெருங்கி பழகியுள்ளார். தன்னை திருமணம் செய்வதாக கூறியதால் சந்தியா கேட்கும்போதெல்லாம் பணம் கொடுத்துள்ளார் ஆன்றோ. இந்த நிலையில் சந்தியாவுக்கு திருமணம் ஆன விபரம் ஆன்றோவுக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து சந்தியாவை விட்டு விலகுவதற்காக, கொடுத்த பணத்தை திரும்பகேட்டுள்ளார் ஆன்றோ.
மேலும் போலீஸிலும் புகார் அளிக்க ஆன்றோ தயாரானதால் இந்த விவகாரம் சந்தியாவின் கணவர் உள்ளிட்டவர்களுக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்தே இருவரும் உயிரை மாய்த்துள்ளனர். சந்தியா தனது கணவனுக்கு மதுவில் விஷம் கலந்து கொடுத்துவிட்டு தூக்கில் தொங்கினாரா, அல்லது சந்தியா தற்கொலை செய்ததால் கணவன் ஜான் ஐசக் விஷம் குடித்து தற்கொலை செய்தாரா என்பது குறித்த விசாரணை நடந்துவருகிறது. சந்தியாவின் மொபைல் போனில் லாக் எடுத்து ஆராய்ந்தால் முழுவிபரமும் தெரியவரும்” என்றனர்.