குரங்கு அம்மை நோயை ஒழிக்க ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் அவசியம்: உலக சுகாதார அமைப்பு

ஐரோப்பாவிலிருந்து குரங்கு அம்மை நோயை ஒழிப்பதற்கு ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் அவசியம் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பாவுக்கான பிராந்திய இயக்குநர் ஹான்ஸ் ஹென்றி கூறும்போது, “ஐரோப்பா குரங்கு அம்மை நோய் பரவலின் மையமாக உள்ளது. கடந்த இரண்டு வாரங்களில் தொற்றும் மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. இதுவரை 4,500 குரங்கு அம்மை நோய் தொற்றுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. உலக அளவில் 31 நாடுகளில் குரங்கு அம்மை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குரங்கு அம்மை சர்வதேச அளவில் அச்சத்தை ஏற்படுத்தவில்லை. எனினும் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். ஐரோப்பாவிலிருந்து குரங்கு அம்மை நோயை நீக்குவதற்கு ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் அவசியம்” என்று தெரிவித்தார்.

குரங்கு அம்மை நோயை பொறுத்தவரை அது சின்னம்மை நோயுடனேயே தொடர்புப்படுத்தப்படுகிறது. எனினும் குரங்கு அம்மையினால் பாதிப்புகள் குறைவு என்றே பரவலாக கூறப்படுகிறது.

குரங்கு அம்மை என்பது வைரஸால் ஏற்படும் ஓர் அரிய வகை தொற்றுநோய். குரங்கு அம்மை வைரஸ் என்பது Poxviridae குடும்பத்தின் Orthopoxvirus இனத்தைச் சேர்ந்த ஓர் இரட்டை இழை DNA வைரஸ்.

குரங்கு அம்மை நோய் மனிதர்களுக்கு இடையே எளிதில் பரவாது. இருப்பினும் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர் பயன்படுத்திய பொருட்களை உபயோகிப்பதன் மூலம் அது மற்றவர்களுக்குப் பரவலாம். கரோனாவைப் போன்று, இந்த நோயும் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து இருமல், தும்மலின் மூலமும் மற்றவர்களுக்குப் பரவும் ஆபத்து உள்ளது. ஆனால் பரவும் சதவீதம் கரோனாவைவிட மிகமிகக் குறைவுதான் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.