வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மும்பை: நுபுர் ஷர்மாவிற்கு ஆதரவாக கருத்து பதிவிட்ட டெய்லர் ராஜஸ்தானில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அடங்குவதற்குள், அதேபோன்று மஹாராஷ்டிராவிலும் மருந்து கடை உரிமையாளர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மஹாராஷ்டிரா மாநிலம் அமராவதி நகரில் கால்நடைகளுக்கான மருந்துக்கடை வைத்துள்ளவர் உமேஷ் கோல்ஹே. கடந்த மாதம் 21ம் தேதி இரவு கடையை அடைத்து விட்டு தனது டூவிலரில் வீட்டிற்கு அவர் வந்து கொண்டிருந்தார்.
மற்றொரு வாகனத்தில், அவரது மனைவியும், 27 வயதான மகனும் வந்து கொண்டிருந்தனர். உமேஷை வழி மறித்த சிலர், கழுத்தை அறுத்துவிட்டு தப்பி சென்றனர். படுகாயமடைந்த அவரை, மனைவியும் மகனும் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது தொடர்பாக போலீசார் கூறுகையில், நுபுர் சர்மாவிற்கு ஆதரவாக சில கருத்துகளை ‛வாட்ஸ் ஆப்’ செயலியில் பகிர்ந்துள்ளார். அவரது வாடிக்கையாளர்கள் மற்றும் முஸ்லிம்கள் அங்கம் வகிக்கும் குழுவிலும் தவறுதலாக பகிர்ந்துள்ளார். இதனையடுத்து இர்பான் என்பவர் அவரை கொலை செய்ய திட்டமிட்டு, கொலையாளிகளுக்கு 10 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளார்.
கொலை சம்பவத்தில் ஈடுபட்ட அகமது(22) ஷாருக் பதான்(25), அப்துல் தொபிக்(24), சோயப் கான்(22) மற்றும் அதிப் ரஷீத்(22) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் அமராவதி மாவட்டத்தை சேர்ந்த கூலி தொழிலாளர்கள், இர்பான் தலைமறைவாகியுள்ளார். அவரை தேடி வருகிறோம். கொலை சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. அந்த இடத்தில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகிறோம் என்றனர்.
பா.ஜ., நிர்வாகிகள் கூறுகையில், நுபுர் சர்மா சர்ச்சையில் தான் உமேஷ் கொலை செய்யப்பட்டுள்ளார். போலீசில் உள்ளவர்களும் அவ்வாறு தான் கருதுகின்றனர். நுபுர் ஷர்மாவிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்ததால் தான் கொலை செய்ததாக கொலையாளிகளும் ஒப்பு கொண்டுள்ளனர் என தகவல் வருகிறது. ஆனால், போலீசார் இதனை மறைக்க முயற்சி செய்கின்றனர். 21ம் தேதி கொலை நடந்துள்ளது.
உதய்ப்பூரில் டெய்லர் கன்னையா லால் கொலை செய்யப்படாமல் இருந்திருந்தால், இந்த சம்பவம் பெரியளவில் விவாதத்திற்கு உள்ளாகி இருக்கும். இது போன்ற காரணங்களினால், போலீசார் கொலை சம்பவத்தை மறைக்கின்றனர். குற்றவாளிகளை கைது செய்த பிறகும் உண்மையான காரணத்தை கண்டறிய மறுத்தால், வழக்கு விசாரணையை அவர்களிடம் இருந்து மாற்ற வேண்டும் என்றனர்.
இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணைக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டுள்ளார்.
Advertisement