டிஸ்பூர் : அசாமில் கனமழை நீடித்து வரக்கூடிய நிலையில், திப்ருகாரில் மத்திய பாதுகாப்பு படையினர் முகாமிற்குள் வெள்ள நீர் புகுந்ததால் அங்கிருந்த வீரர்கள் இரவோடு இரவாக வேறு பகுதிக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். தலைநகர் கவுகாத்தி உட்பட அசாமில் பல்வேறு பகுதிகளில் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் நிலச்சரிவும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.இதனால் அங்குள்ள மக்கள் மிகுந்த பாதிப்பை சந்தித்து வருகின்றனர். திப்ருகரில் கடந்த 3 நாட்களாக கொட்டி வரும் மழையால் மத்திய பாதுகாப்புப் படையினர் முகாமிற்குள் வெள்ள நீர் புகுந்தது. இதனால் அங்கிருந்த நூற்றுக்கணக்கான வீரர்கள் வேறு பகுதிக்கு மாற்றப்பட்டனர். திப்ருகாரில் மேலும் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டு இருப்பதால் வேறு இடத்திற்கு இடம் பெயர்வதே நல்லது என்று அதிகாரி ஒருவர் கருத்து தெரிவித்தார். இதனிடையே மாநிலம் முழுவதும் கடந்த 24 நேரத்தில் மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவிற்கு மேலும் 14 பேர் பலியானதால் ஒட்டுமொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 173 ஆக அதிகரித்துள்ளது. வெள்ளிக்கிழமை வரை மாநிலத்தின் 30க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் சுமார் 30 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.