ஹைதராபாத்: மகாராஷ்டிராவை தொடர்ந்து அடுத்து தெலங்கானா அரசை கவிழ்க்கப் போவதாக பாஜகவினர் கூறி வருகிறார்கள், அப்படி செய்தால் அதன் பிறகு நானும் மத்திய அரசை கவிழ்க்க வாய்ப்பு ஏற்படும் என அம்மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் கூறியுள்ளார்.
மகாராஷ்டிர மாநிலத்தில் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு சொந்த கட்சியான சிவசேனாவை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அக்கட்சியின் 40 எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி உயர்த்தினர். பாஜகவும் சிவசேனா அதிருப்தி அணியும் இணைந்து புதிய அரசை அமைத்தனர்.
சிவசேனா அதிருப்தி அணி தலைவர் ஏக்நாத் ஷிண்டே முதல்வராகவும் பாஜக மூத்த தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்வராகவும் பதவியேற்றனர்.
இந்தநிலையில் மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே குடும்பத்தினரை போலவே தெலங்கானாவில் சந்திரசேகர் ராவ் குடும்பத்தினர் வாரிசு அரசியல் செய்வதாக கூறியுள்ளனர். இதற்கு சந்திரசேகர் ராவ் பதிலடி கொடுத்துள்ளார்.
பாஜக தேசிய செயற்குழுக் கூட்டம் ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இதற்கு கலந்து கொள்ளுவதற்காக பிரதமர் மோடி வந்தார். ஆனால் அவரை முதல்வர் என்ற முறையில் வரவேற்க சந்திரசேகர் ராவ் செல்லவில்லை. அதேசமயம் எதிர்க்கட்சிகளின் சார்பில் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் யஷ்வந்த் சின்ஹா முன்னதாக இன்று ஹைதராபாத் வந்தநிலையில் அவரை வரவேற்க சந்திரசேகர் ராவ் விமான நிலையத்திற்கே சென்றார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
ஹைதராபாத்தில் அமர்ந்திருக்கும் மத்திய அமைச்சர்கள் மகாராஷ்டிராவை அடுத்து இப்போது தெலங்கானா தான் என்கிறார்கள். சரி எங்கள் அரசை கவிழச் செய்யுங்கள். அதன் பிறகு நான் சுதந்திரமாகி விடுவேன். பின்னர் டெல்லியில் ஆட்சியை கவிழ்க்க எங்களால் முடியும். இதற்காக நானும் காத்திருக்கிறேன்.
அக்னிபத் திட்டத்துக்கு எதிராக நாட்டில் நடந்த போராட்டங்கள் தவறுதான். அத்தகைய சூழ்நிலையில் நாம் அமைதியாக இருக்கக்கூடாது. நமக்கு ஒரு மாற்றம் தேவை. ஆனால் எந்த விதமான மாற்றம் என்பது முக்கியம். இந்திய அரசியலில் ஒரு தரமான மாற்றத்தை கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.