இந்தியாவில் நிலத்தடி நீர்மட்டத்தின் தற்போதைய நிலை?

இந்தியாவில் மாநிலங்களில் நிலத்தடி நீர் மட்டத்தின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
உலக மக்கள்தொகையில் சுமார் 16 விழுக்காடு பேர் இந்தியாவில் வாழ்கிறார்கள். ஆனால் உலகின் 4 விழுக்காடு நன்னீர் ஆதாரங்கள் மட்டுமே இங்கு உள்ளன. நன்னீர் குறைவாக இருப்பது மட்டுமில்லாமல், இந்தியாவில் கிடைக்கும் நீர் ஆதாரங்களில் பெரும் ஏற்றத்தாழ்வு உள்ளது.
இந்தியாவின் நிலத்தடி நீரில் 70 விழுக்காடு நாட்டின் வடக்கு, வடமேற்குப் பகுதியில் உள்ளது. குறிப்பாக பஞ்சாப், ஹரியானா, டெல்லி மற்றும் மேற்கு உத்தரப் பிரதேசத்தின் பகுதிகளில் நீர் இருப்பு அதிகமாக உள்ளது. இது நாட்டின் பரப்பளவில் 30 விழுக்காடு மட்டுமே. ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களின் பல பகுதிகளில் மழை குறைவு காரணமாகவும், தென்னிந்தியாவில் கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாட்டின் சில பகுதிகளில் புவியியல் சூழல் காரணமாகவும் நிலத்தடி நீர்மட்டம் குறைந்தே காணப்படுகிறது. இந்தியாவில் 64 விழுக்காடு பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டத்தின் அளவு பாதுகாப்பான அளவில் உள்ளது. பல மாநிலங்களில் நிலத்தடி நீர் மட்டம் ஆபத்தான நிலைக்குச் சென்றுள்ளது.
image
குறிப்பாக டெல்லி, பஞ்சாப், ஹரியானா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. சில மாநிலங்களில் நிலத்தடி நீர் தேசிய சராசரியை விட குறைவாக உள்ளது. குறிப்பாக நாட்டின் தலைநகர் டெல்லியின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. அங்கு நிலத்தடி நீர் 8 விழுக்காடு பரப்பளவில் மட்டுமே பாதுகாப்பான மட்டத்தில் உள்ளது.
பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் ஹரியானாவில் முறையே 11.3 விழுக்காடு, 12.54 விழுக்காடு மற்றும் 21.28 விழுக்காடு பரப்பளவு நிலத்தில் மட்டுமே நிலத்தடி நீர் மட்டம் பாதுகாப்பாக உள்ளது. இந்த மாநிலங்களில் தான் நிலத்தடி நீர் ஆண்டிற்கான சராசரி இருப்பை விட மிக அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. மேலும் தமிழ்நாடு, தெலுங்கானா மற்றும் கர்நாடகா மாநிலங்களிலும் நிலத்தடி நீர் மட்டம் குறைவாக உள்ளது.

2004 முதல் 2020 வரையிலான அரசாங்க தரவுப்படி, நாட்டின் நிலத்தடி நீர் பயன்பாட்டில் 49 விழுக்காட்டினை உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், பீகார், மத்தியப் பிரதேசம் மற்றும் கேரளா ஆகிய ஐந்து மாநிலங்களே எடுத்துக்கொள்கிறது. நாட்டின் மற்ற பகுதிகள் 50 விழுக்காடு நிலத்தடி நீரை பயன்படுத்துகின்றன.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.