குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரான திரௌபதி முர்மு தமிழகத்தில் இன்று ஆதரவு திரட்டினார்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளராக திரௌபதி முர்மு போட்டியிடுகிறார். இதனையொட்டி பல்வேறு மாநிலங்களுக்கு சென்று அவர் ஆதரவு சேகரித்து வருகிறார். அந்த வகையில் தமிழகத்திற்கு இன்று வந்த திரௌபதி முர்மு, அதிமுகவிடம் ஆதரவு கோரினார். தமிழகத்தில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளான, பாஜக, பாமக, தேமுதிக, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி, புதிய நீதி கட்சி, புரட்சி பாரம் உள்ளிட்ட கட்சி தலைவர்களிடம் ஆதரவை கோரினார் திரௌபதி முர்மு. தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் 75 சட்டமன்ற உறுப்பினர்கள் 7 நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளனர். தம்பிதுரை, சி வி சண்முகம், தர்மர், சந்திரசேகரன், ஜி கே வாசன், அன்புமணி ராமதாஸ், ஓ பி ரவீந்திரநாத் குமார் ஆகிய எம்பிக்களும், அதிமுகவை சேர்ந்த 66 சட்டமன்ற உறுப்பினர்கள், 5 பாமக உறுப்பினர், 4 பாஜக சட்டமன்ற உறுப்பினர்களும் உள்ளனர்.
இதற்கான கூட்டம் சென்னை நுங்கம்பாத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் ஓபிஎஸ், இபிஎஸ் இருவருமே கலந்துகொண்டனர். எப்படியும் இருவரும் தனித்தனியாகவே சந்திக்கப் போகிறார்கள் என்பது ஏற்கனவே தெரிந்ததுதான் என்றாலும், யார் முதலில் மேடை ஏறினார்கள் என்பது அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அதிமுக இணை ஒருங்கிணைப்பாளராக இருப்பவர்தான் எடப்பாடி பழனிசாமி. ஆனால் இவர்தான் முதல்முறையாக மேடையில் ஏறி, திரௌபதி முர்முவுக்கு ஆதரவு தெரிவித்தார். எடப்பாடி பழனிசாமி உடன் கேபிஎம் முனுசாமி, பொன்னையன், திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், தம்பிதுரை, தமிழ்மகன் உசேன், ஜெயகுமார், வேலுமணி தங்கமணி உள்ளிட்ட அதிமுக மூத்த தலைவர்கள் சென்றனர். இந்தக் கூட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் தவிர பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.
இதில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “ குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் பழங்குடியின பெண்ணை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆதரிக்கவில்லை. திரௌபதி முர்முவை ஆதரிக்காமல் போனதன் மூலம், சமூகநீதி என முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களை ஏமாற்றி வருவது வெட்டவெளிச்சமாகியுள்ளது” என்றார்.
எடப்பாடி பழனிசாமி கூட்டத்தில் உரையாற்றும்போது ஓபிஎஸ் அந்த ஹோட்டலில்தான் இருந்தார். ஆனால் அந்த கூட்டத்தில் இல்லை. தனி அறையில் இருந்தார். எடப்பாடி பழனிசாமி பேசி முடித்து அங்கிருந்த கிளம்பிய பின்னர்தான் ஓ.பன்னீர்செல்வம் மேடையேற்றப்பட்டார். மேடையில் பேசிய ஓ.பன்னீர்செல்வம் கட்சி சட்ட விதிகளின்படி இன்றுவரை அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் நான்தான் என்றறோடு திரௌபதி முர்முவுக்கு தனது ஆதரவினையும் தெரிவித்தார்.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், “அதிமுக பொதுக்குழு தான் இறுதி அதிகாரம் படைத்தது. பொதுகுழுவின் முடிவை கட்டுப்பட வேண்டும். அப்படி அவர் கட்டுப்பட்டு இருந்தால் இன்று குடியரசு தலைவர் வேட்பாளரை தனியாக சந்தித்து பேசும் நிலை ஏற்பட்டு இருக்காது. பலமுறை ஓபிஎஸ் அவர்களை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினோம் அப்போதெல்லாம் எதையும் ஏற்றுக்கொள்ளாமல் நீதிமன்றத்திற்கு சென்ற ஒருவரை தற்போது ஏற்றுக்கொள்ள வேண்டும் என கூறினாள் தொண்டர்கள் ஏற்றுகொள்ள மாட்டார்கள்” என்றார்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கே ஆதரவுக்கரம் அதிகமாக உள்ளது. இந்நிலையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளராக உள்ள எடப்பாடி பழனிசாமி முதலாவதாக மேடையற்றப்பட்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
யாதும் ஊரே…யாவரும் கேளின் என்ற கணியன் பூங்குன்றனாரின் வரிகளை குறித்து தன்னுடைய உரையை தொடங்கினார் திரௌபதி முர்மு. மேலும், “இந்தியாவில் பரவலாக உள்ள சந்தாலி வகை பழங்குடியினத்தைச் சேர்ந்தவள் நான். ஆன்மீகத்துக்கும் பெயர்போன மாநிலம் தமிழ்நாடு. பழம்பெருமை மிக்க, வரலாற்று சிறப்பு மிக்க தமிழ்நாட்டுக்கு வந்திருப்பதில் மகிழ்ச்சி. இந்தியாவின் சுதந்திரத்தில் தமிழ்நாடும், தமிழ்நாட்டு வீரர்களும் முக்கிய பங்கு வகித்தனர்’ என்றார். முன்னதாக தமிழ் மொழி & திருக்குறளின் பெருமையை குறிப்பிட்டு தனது உரையைத் தொடங்கிய திரௌபதி முர்மு, ஜெய் ஹிந்த், ஜெய் பாரத், ஜெய் தமிழ்நாடு என்று தனது உரையை நிறைவு செய்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM