பெங்களூரு: ஆளில்லாத போர் விமானத்தை இயக்கும் பரிசோதனை வெற்றி பெற்றுள்ளது என்று மத்திய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்பு (டிஆர்டிஓ) தெரிவித்துள்ளது.
முழுவதும் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் ஆளில்லா போர் விமானங்களை உருவாக்கும் முயற்சியில் முக்கிய வெற்றியாக, கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா விமானப்பயிற்சி தளத்தில் நேற்று முதல் ஆளில்லா போர்விமானம் சோதித்து பார்க்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை டிஆர்டிஓ அதிகாரிகள் செய்திருந்தனர். தன்னிச்சையாக பறந்து இலக்குகளை சரியாக தாக்கும் அளவுக்கு இந்த ஆளில்லா விமானம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் முதல் பரிசோதனை வெற்றிகரமாக அமைந்ததாக டிஆர்டிஓ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விமானம் தரையிலிருந்து வானில் பறந்தது, வழிகாட்டிக்கான நடைமுறைகளை கையாண்டது, கீழே இறங்கியது என அனைத்தும் சுமூகமாக இருந்ததாக அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து திட்ட அதிகாரிகளுக்கு டிஆர்டிஓ தலைவரும், பாதுகாப்புத்துறை (ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி) செயலர் டாக்டர் ஜி.சதீஷ் ரெட்டி பாராட்டு தெரிவித்தார்.