சென்னை: “அதிமுக சட்ட விதிப்படி, இன்று வரை நான்தான் கட்சியினுடைய ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன்” என்று அதிமுக பொருளாளர் என்று அறிவிக்கப்பட்டுள்ள ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரவுபதி முர்முவை சந்தித்து அதிமுக பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு தெரிவித்தார். அவருடன் அவரது ஆதரவாளர்களான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் ஆகியோர் உடனிருந்தனர்.
பின்னர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்தார்.அப்போது அவர் கூறியது: “தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி வேட்பாளர் திரவுபதி முர்முவை ஆதரித்து, அதிமுக சார்பில் எங்களுடைய இதயப்பூர்வமான ஆதரவை தெரிவித்திருக்கின்றோம். அதிமுக சட்ட விதிப்படி, இன்றுவரை நான்தான் கட்சியினுடைய ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன்” என்று அவர் கூறினார்.
முன்னதாக, குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரவுபதி முர்மு வருகையையொட்டி, இந்த நிகழ்ச்சி நடைபெறும் தனியார் ஹோட்டலுக்கு அதிமுகவின் தலைமை நிலையச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வந்திருந்தனர். எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சியின் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், தம்பிதுரை, பொன்னையன், கே.பி.முனுசாமி,உள்ளிட்ட இபிஎஸ் ஆதரவாளர்கள், குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரவுபதி முர்முவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
பின்னர் எடப்பாடி பழனிசாமி பேசியது: “தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில், இந்திய குடியரசுத் தலைவர் பதவிக்கு வேட்பாளராக போட்டியிடும் திரவுபதி முர்முவுக்கு அதிமுக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் முழுமையான ஆதரவுடன் திரவுபதி முர்மு இமாலய வெற்றி பெற துணை நிற்போம்.
இந்த குடியரசுத் தலைவர் தேர்தலில், போட்டியிடும் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை முதல்வர் ஸ்டாலின் ஆதரிக்கவில்லை. திரவுபதி முர்முவை ஆதரிக்காமல், சமூக நீதி என பேசி மக்களை தமிழக முதல்வர் ஸ்டாலின் ஏமாற்றி வருகிறார். திமுக காங்கிரஸ், சூழ்ச்சியால் 2012 குடியரசுத் தலைவர் தேர்தலில் பி.ஏ.சங்மா வெற்றி பெற முடியவில்லை” என்று அவர் கூறியிருந்தார்.