சென்னை புளியந்தோப்பு காவல் மாவட்டத்தில் வசித்து வந்த 8 வயது சிறுமிக்கு மாளிகை கடை நடத்தி வந்தவர், பாலியல் தொல்லைக் கொடுத்ததாக 2016-ம் ஆண்டு செம்பியம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. அதன்பேரில் போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளில் போலீஸார் வழக்கு பதிவு செய்து மளிகை கடை நடத்தியவரைக் கைது செய்தனர். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
செம்பியம் அனைத்து மகளிர் போலீஸார், குற்றபத்திரிகை தாக்கல் செய்தும் சாட்சிகளை முறையாக ஆஜர்படுத்தினர். இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்தநிலையில் தீர்ப்பளிக்கப்பட்டது. அதில் மளிகை கடை நடத்தி வந்தவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானதால் போக்சோ சட்டப்பிரிவில் அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனையும் 25,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராத தொகையை செலுத்த தவறினால் மூன்று மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
மற்றொரு வழக்கு…
புளியந்தோப்பு காவல் மாவட்டத்தில் வசித்து வந்த பத்து வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 50 வயதுடைய நபர் கடந்த 2020-ல் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. புளியந்தோப்பு அனைத்து மகளிர் போலீஸார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தும் முறையாக சாட்சிகளையும் ஆஜர்படுத்தினர்.
இந்த வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பளிக்கப்பட்டது. அதில் எதிரி மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு போக்சோ சட்டப்பிரிவின் கீழ் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் 5,000 ரூபாய் அபாராமும் விதிக்கப்பட்டது. சட்டப்பிரிவு 366-ன் கீழ் 5 ஆண்டுகள் சிறை தண்டனை, 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. தண்டனைகளை ஏக காலத்தில் அனபவிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.