தமிழகத்தில் புதிதாக 2,533 பேருக்கு கரோனா; சென்னையில் 1050+ பாதிப்பு

சென்னை: தமிழகத்தில் இன்று ஆண்கள் 1,400, பெண்கள் 1,133 என மொத்தம் 2,533 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 1059 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 34 லட்சத்து 80,103 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 34 லட்சத்து 28,758 பேர் குணமடைந்துள்ளனர். இன்று மட்டும் 1,372 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர். இன்று நோய்த்தொற்று பாதிப்பால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. தற்போது மாநிலம் முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டோர் உள்பட சிகிச்சைப் பெற்று வருவோரின் எண்ணிக்கை 13,319 ஆக உள்ளது.

தமிழகத்தில் நேற்று கரோனா தொற்று பாதிப்பு 2,385 ஆகவும், சென்னையில் 1025 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த சில வாரங்களாக கரோனா பாதிப்பு தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. தொற்று பாதிப்பு சென்னையில் மட்டும் இரண்டாவது நாளாக 1000-ஐ கடந்துள்ளது.

முன்னதாக, இன்று காலை நேர நிலவரப்படி இந்தியாவில் புதிதாக 17,092 பேர் கரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 14,684 பேர் கடந்ந 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டு மொத்தமாக நாட்டில் 197.84 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இன்று காலை சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், ”உலகம் முழுவதும் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் 10-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை தினசரி தொற்று பாதிப்புள்ளது.

தமிழகத்தில் தினசரி தொற்று பாதிப்பு 2 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இதைத் தொடர்ந்து அனைத்துத் துறை அலுவலர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி, பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளார்.

கரோனா தொற்றுக்கு மிகப்பெரிய பாதுகாப்பாக தடுப்பூசி உள்ளது. முதல் தவணை 95 சதவீதத்தினருக்கும், 2-ம் தவணை 85 சதவீதத்தினருக்கும் செலுத்தப்பட்டுள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி கடந்த மாதத்துக்கு முன்பு வரை 88 சதவீதமாக இருந்தது. இதற்கு முக்கிய காரணம் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதுதான்.

தடுப்பூசி செலுத்தி ஓராண்டை கடந்தவர்களுக்கு நோய் எதிர்ப்புசக்தி படிப்படியாகக் குறைகிறது. அதனால், மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அவர்கள் பூஸ்டர் தவணை தடுப்பூசியை உடனடியாக செலுத்திக் கொள்ள வேண்டும்” என்று அமைச்சர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.