“அரவேக்காடு விமர்சனங்களுக்கு பதில் சொல்ல அவசியம் இல்லை" – கரூரில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

கரூர் திருமாநிலையூரில் இன்று நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 80,943 பயனாளிகளுக்கு ரூ. 1,110 கோடி மதிப்பிலான நிலத்திட்ட உதவிகளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதற்காக, நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலமாக திருச்சி விமான நிலையத்திற்கு மாலை 5 மணி அளவில் வருகைதந்த முதல்வர், திருச்சியில் இருந்து கார் மூலமாக நேற்று கரூர் வருகை புரிந்தார். வழக்கமாக தமிழக முதலமைச்சர் தங்கும் தனியார் நட்சத்திர விடுதிகளுக்கு பதிலாக, இந்தமுறை அரசு விருந்தினர் மாளிகையில் இரவு தங்கினார்.

பின்னர், இன்று காலை 9 மணி அளவில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைந்துள்ள விருந்தினர் மாளிகை துவங்கி திருமாநிலையூர் விழா மேடை வரை கரூர் மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் அமைச்சர் செந்தில் பாலாஜி ஏற்பாட்டில் தமிழக முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

முதல்வரோடு செந்தில் பாலாஜி

தொடர்ந்து, விழா மேடையில் தமிழக முதலமைச்சருக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி வீர வாள், இரண்டு நினைவு பரிசு வழங்கினார். கரூர் மாவட்ட தி.மு.க-வினர் மக்களை திரளாக அழைத்துவர தனியார் பள்ளி, கல்லூரி வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன.

இந்த நிகழ்வில் பல்வேறு திட்டங்கள், நலத்திட்டங்களை அறிவித்த பிறகு, இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர், “கரூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் இந்நிகழ்ச்சி அரசு நிகழ்ச்சியா, கட்சி மாநாடா என்று வியந்து பார்க்கும் வகையில் உள்ளது. மாபெரும் கடல் அலை போல கூடி இருக்கிற மக்களை பார்க்கும்போது, கடல் இல்லாத இந்த கரூர் நகருக்கு, மக்கள் கடலையே உருவாக்கியுள்ளார் அமைச்சர் செந்தில் பாலாஜி. அதன்மூலம், அலையில்லாத கரூருக்குள் மக்கள் அலையை உருவாக்கி இருக்கிறார். எந்த நிகழ்ச்சியையும் பிரமாண்டமாக நடத்துவார். பிறகு, அவர் செய்த பிரமாண்டத்தை அவரே டாஸ்க்காக நிர்ணயித்துக்கொண்டு, அவரே அதைவிட பிரமாண்ட நிகழ்ச்சியை நடத்தி காட்டுவார்.

கரூர், கோவை மாவட்ட பொறுப்பையும் ஏற்று, இரண்டு மாவட்டங்களிலும் எவ்வித தொய்வும் இன்றி சிறப்பாக செயல்பட்டு வருகிறார். ஓராண்டு காலமாக திமுக அரசு ஓய்வின்றி உழைத்து வருகிறது என்பதற்கு கரூர் மாவட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள அரசு திட்டங்களை சாட்சி. ஆட்சிப் பொறுப்பேற்ற நிமிடத்தில் இருந்து செயல்படக்கூடிய அரசாக திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி தமிழகத்தில் நடைபெற்று வருகிறது.

நிகழ்வில் பேசும் முதல்வர்

அதுதான் உங்களில் ஒருவனான முத்துவேல் கருணாநிதியின் ஆட்சி. தலைவர் கலைஞர் அவர்கள் என்னுள் இருந்து இயக்கிக் கொண்டிருக்கிறார். இன்றைய சூழ்நிலையில் தலைவர் கலைஞர் இருந்தால் என்ன சிந்திப்பார், எப்படி செயல்படுவாரோ அதுபோல நித்தமும் சிந்தித்து செயல்பட்டு வருகிறேன். எல்லா மாவட்டங்களுக்கும் இடையில் தொழில் வளர்ச்சியில் போட்டி இருக்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டமும் வளர்ந்தால் தான், தமிழ்நாடு வளரும். கரூர் மாவட்டம், திருப்பூர் மாவட்டத்தை விட தொழில் வளர்ச்சியில் வளர வேண்டும். கரூர் காமராஜ் மார்க்கெட் புதுப்பிக்கும் பணி, சாயப்பட்டறை பூங்கா, ஜவுளி பூங்கா அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. நேற்று கரூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் தொழில் முனைவோரிடம் இரண்டு மணி நேரம் கலந்துரையாடல் மேற்கொண்ட பொழுது வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் தற்போது மூன்று புதிய அறிவிப்புகளை அறிவிக்கின்றேன்.

கரூர் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படுகின்ற ஜவுளி பொருட்களை வாங்குவதற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் வாடிக்கையாளர்களுக்கு ஜவுளி உற்பத்தி பொருட்களை காட்சிப்படுத்துவதற்கு தேவையான காட்சி அரங்கம் கரூர் மாவட்டத்தில் அமைக்கப்படும். கரூர் மாவட்டத்தில் உற்பத்தியாக கூடிய ஜவுளி பொருட்களின் தரம் மற்றும் தொழில்நுட்ப பரிசோதனை நிலையம் கரூரில் அமைக்கப்படும். அதேபோல், கரூரில் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ள போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தக்கூடிய கரூர் மாநகராட்சி புதிய பேருந்து நிலையம் திருமாநிலையூரில் ரூ. 47 கோடி மதிப்பீட்டில் நவீன புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும்.

கரூர் மாவட்டம் மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஓராண்டு தி,மு,க ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை கண்டு முதலமைச்சராக மன நிறைவு அடைகிறேன். ஒவ்வொருவருக்கும் மனசாட்சி தான் நீதிபதி. அந்த வகையில் மக்கள் மனசாட்சி அளிக்கக்கூடிய தீர்ப்பு தான் நான் செல்லுகிற இடங்களில் மக்கள் முகமலர்ச்சியோடு வரவேற்பு அளிப்பதே அதற்கு மற்றுருமொரு சாட்சி.

நலத்திட்ட உதவி வழங்கும் முதல்வர் மு

இதன் மூலம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி மக்களை முன்னேற்றும் ஆட்சியாக தெளிவாக அறிய முடிகிறது. இதனால்தான் வீண் விமர்சனங்களுக்கு நான் ஊடகங்களில் பதில் அளிப்பதில்லை. எனது நேரத்தை வீண் செய்ய விரும்பவில்லை நன்மை செய்வதற்கே நேரம் போதவில்லை. அக்கப்போர், அரவேக்காடு விமர்சனங்களுக்கு பதில் சொல்ல அவசியம் இல்லை. மானத்தைப் பற்றி கவலைப்படும் ஒரு நபருடன் போராடலாம். ஆனால், அதைப் பற்றி கவலைப்படாத ஒரு நபரிடம் நாம் போராட முடியாது என்று தந்தை பெரியார் கூறியுள்ளார்.

அப்படி, மானத்தை பற்றி கவலைப்படாத நபர்கள் வைக்கும் விமர்சனத்தை பற்றி நான் கவலைப்பட போவதில்லை. தி.மு.க ஆட்சி எப்படி செயல்படுகிறது என்று நல்ல மானமுள்ள மனிதர்களிடம் செய்தியாளர்கள் கேட்க வேண்டும் என உரிமையுடன் கேட்கிறேன். தி.மு.க ஆட்சியில் பயன்பெற்ற மக்களிடம் பேட்டி காணுங்கள்.

மீண்டும் மஞ்சப்பை இயக்கம் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக தமிழக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கை குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடம் பேட்டி காணுங்கள். சமூக நீதி, தி.மு.க ஆட்சியில் எவ்வாறு காப்பாற்றப்பட்டு வருகிறது என்று சமூக நீதிக்காக போராடும் நபர்களிடம் கேளுங்கள். நியாயமான கோரிக்கையை யார் வைத்தாலும் அதனை நிறைவேற்றித் தருவதற்கு தமிழக அரசு தயாராக உள்ளது.

வாழைத்தார்கள் எடுத்து செல்லும் மக்கள்

அனைவரின் கருத்துக்களை கேட்டு அதனை நிறைவேற்றித் தருவதற்கு தான் நான் இருக்கிறேன் தவிர, எனது கருத்துக்களை அனைவரும் கேட்க வேண்டும் என நினைப்பவன் நான் அல்ல. ஊடகங்கள் ஆட்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். ‘நாங்களும் இருக்கின்றோம்’ என காட்டிக்கொள்வதற்காக ஊடகங்கள் முன்பு வாந்தி எடுப்பவர்கள் கொடுக்கும் பேட்டிகளுக்கு நான் பதில் அளிக்க நான் என்றைக்கும் தயாராக இல்லை. என்னையும் திமுக இயக்கத்தையும் எதிர்த்து விமர்சனம் வைத்து அதன் மூலம் அவர்கள் வளரலாம் என்று நினைப்பவர்களை பார்த்து நான் வருத்தப்படுகிறேன். கோடிக்கணக்கான தமிழ் மக்களின் வீட்டில் விளக்காகவும், அவர்கள் வீட்டில் விளக்கு ஏற்றி வைப்பவனாகவும் இருக்க விரும்புகிறேன்” என்றார்.

இந்த நிகழ்ச்சி முடிந்ததும் முதல்வரை வரவேற்க இருமங்கிலும் கட்டி வைக்கப்பட்டிருந்த வாழைமரங்களில் தொங்கிய வாழ்ழைத்தார்கள் மக்கள் வெட்டி எடுத்துச் சென்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.