நோனி: மணிப்பூர் ரயில்வே கட்டுமான தளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ராணுவ வீரர்கள் உட்பட 81 பேர் பலியானதாக அம்மாநில முதல்வர் பிரேன் சிங் அதிகாரபூர்வமாக அறிவித்தார். கடந்த ஜூன் 29ம் தேதி இரவு மணிப்பூர் மாநிலம் நோனி மாவட்டத்தில் அமைக்கப்பட்டு வரும் துபுல் ரயில்வே கட்டுமான தளத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி காணாமல் போன மற்றும் பலியானவர்களின் எண்ணிக்கை 81 ஆக உயர்ந்துள்ளது. நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு தலா 5 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாயும் இழப்பீடாக வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் பிரேன் சிங் அறிவித்துள்ளார்.தொடர்ந்து நேற்று அவர் சம்பவ இடத்தை பார்வையிட்டார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘மணிப்பூர் மாநில வரலாற்றில், இது மிகவும் மோசமான சம்பவம். கிட்டத்தட்ட 81 பேர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளனர். இதில் 18 ராணுவ வீரர்களும் பலியாகினர். மேலும் 55 பேர் உடல்கள் சிக்கியிருப்பதாக அஞ்சப்படுகிறது. இதுவரை 20 உடல்கள் மட்டும் மீட்கப்பட்டுள்ளன. மீட்புப் பணிகள் முடிய இன்னும் 2 அல்லது 3 நாட்களாகலாம். ஒன்றிய அரசு அனுப்பிய தேசியப் பேரிடர் படையினர், ராணுவத்தினர் உள்ளிட்டோர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மண்ணில் ஈரப்பதம் காரணமாக வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.இதனால் மீட்புப் பணியில் தாமதம் ஏற்படுகிறது’ என்றார். இதற்கிடையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வெளியிட்ட அறிவிப்பில், ‘மணிப்பூர் நிலச்சரிவு சம்பவத்தில் மேற்குவங்கத்தை சேர்ந்த ஒன்பது வீரர்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார். இந்திய ராணுவம் வெளியிட்ட அதிகாரபூர்வ தகவலின்படி, நிலச்சரிவில் சிக்கி இருப்போரை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை மொத்தம் 15 பிராந்திய ராணுவ வீரர்கள் மற்றும் ஐந்து பொதுமக்கள் மீட்கப்பட்டுள்ளனர்’ என்று தெரிவித்துள்ளது.