சுயமரியாதை திருமணத்தை இந்துக்கள் மட்டுமே செய்து கொள்ள முடியும் – இப்படியொரு தீர்ப்பை, சென்னை உயர் நீதிமன்றம் நேற்றைய தினம் கொடுத்துள்ளது. சென்னையைச் சேர்ந்த ஒரு காதல் ஜோடி சுயமரியாதை திருமணம் செய்து கொள்வதற்காகப் பதிவு திருமண அலுவலகத்தை அணுகியிருக்கிறது. அந்த ஜோடியில், ஆண் இந்து, பெண் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர். அதனால், அவர்களால் சுயமரியாதை திருமணம் செய்து கொள்ளமுடியாது என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
இதையடுத்து, இது தொடர்பான மனு ஒன்றை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறார்கள் அந்தக் காதல் ஜோடியினர். மனுவை விசாரித்த நீதிமன்றம், ‘சுயமரியாதை திருமணம் இந்து திருமண சட்டத்தின் கீழ் வருவது. அதனால் இந்துக்களால் மட்டுமே செய்து கொள்ள முடியும். வேறு மதத்தினரைத் திருமணம் செய்து கொள்ளும்போது அதை சுயமரியாதை திருமணமாகச் செய்ய முடியாது. மணமகன், மணமகள் இருவரும் இந்துக்களாக இருந்தால் மட்டுமே சுயமரியாதை திருமணம் செய்துகொள்ள முடியும்’ என்று தெரிவித்ததோடு மனுவையும் தள்ளுபடி செய்திருக்கிறது.
இதன் பின்னணியில் இருக்கிற சட்டக் காரணத்தைத் தெரிந்து கொள்வதற்காக வழக்கறிஞர் அஜிதாவிடம் பேசினோம்.
“இந்து திருமண சட்டத்தின்கீழ் தான், சுயமரியாதை திருமணத்திற்கான 7 A என்ற செக்ஷன் வருகிறது. 1960-களில் பெரியாரும் அண்ணாவும் தங்கள் மேடைகளிலேயே தாலியில்லாமல், ஐயர் இல்லாமல், ஹோம குண்டம் வளர்க்காமல், ஏழு அடி எடுத்து வைக்காமல் பலருக்கும் திருமணம் செய்துவைத்துக் கொண்டிருந்தார்கள். சம்பந்தப்பட்ட மணமக்களின் பெற்றோரோ, ‘அக்னி வளர்க்கவில்லை; அதை ஏழு முறை சுற்றி வரவில்லை. அதனால் இது இந்து திருமணமே அல்ல. இந்தத் திருமணம் செல்லாது’ என்று நீதிமன்றங்களின் மூலம் அறிவித்துக் கொண்டிருந்தார்கள்.
‘நீங்கள் செய்து வைக்கிற திருமணங்களை நீதிமன்றம் செல்லாது என்று அறிவிக்கிறதே’ என்று பலரும் பெரியாரிடமும் அண்ணாவிடமும் கேட்க, அண்ணாதுரை தமிழக முதல்வரானதும் இந்து சுயமரியாதை திருமணத்துக்கான சட்டத்தில்தான் முதலில் கையெழுத்திடுகிறார். இந்து திருமண சட்டத்தில் தமிழ்நாடு கொண்டு வந்த சட்டத்திருத்தம்தான் 7A என்ற சுயமரியாதை திருமணச் சட்டம்.
இந்துக்கள் மாலை மாற்றிக் கொண்டு அல்லது உறுதிமொழி எடுத்துக்கொண்டு அல்லது மோதிரம் மாற்றிக்கொண்டு என எந்த முறையில் திருமணம் செய்து கொண்டாலும், அதை சுயமரியாதை திருமண சட்டத்தில் பதிவு செய்து விட்டால், சட்டபூர்வமான திருமணமாகக் கருதப்படும். வைதீக முறைப்படி திருமணம் செய்து கொள்ளவில்லை என்றாலும், சுயமரியாதை திருமணமும் சட்டபூர்வமான திருமணம்தான் என்பதே செக்ஷன் 7 A-வின் அடிப்படை.
இதன் காரணமாகத்தான், ஓர் இந்துவும், ஒரு கிறிஸ்தவரும் சுயமரியாதை சட்டத்தின் கீழ் திருமணம் செய்து கொள்ள முடியாது என்று அறிவுறுத்தி இருக்கிறது உயர்நீதிமன்றம்.
அதே நேரம் இந்து – கிறிஸ்டியன், கிறிஸ்டியன் – முஸ்லீம் என வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொள்ள ஒரு சட்டம் வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்தபோது, நேரு அமைச்சரவையில், ‘சிறப்புத் திருமணச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்தச் சட்டத்தின் கீழ் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்த இருவர் தங்களுடைய திருமணத்தைப் பதிவு செய்து கொண்டால் அது சட்டபூர்வமான திருமணமாக எடுத்துக் கொள்ளப்படும். சிறப்புத் திருமண சட்டத்தின் கீழ் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றால், திருமணத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்னாலேயே தங்களுடைய பெயர்களைப் பதிவு செய்ய வேண்டும்.
பதிவு செய்யப்பட்ட அந்த அறிக்கையைப் பதிவு திருமண அலுவலகத்தின் அறிவிப்புப் பலகையில் ஒட்டி வைப்பார்கள். அடுத்த 30 நாட்களில் திருமணம் செய்து கொள்ளவிருக்கிற மணமக்கள் ஏற்கெனவே திருமணம் ஆனவர்கள் என்பது போன்ற எதிர்ப்புகள் வராதபட்சத்தில், அவர்கள் சிறப்புத் திருமண சட்டத்தின் கீழ் தங்கள் திருமணத்தைப் பதிவு செய்து கொள்ளலாம். மத அடையாளம் இல்லாமல் கடவுள் மறுப்பாளர்களும் சுயமரியாதை திருமணம் செய்து கொள்ள முடியும் என்ற நிலையை ஏற்படுத்தியதில், இந்தியாவுக்கு தமிழகம்தான் முன்னோடி” என்றார் வழக்கறிஞர் அஜிதா.