சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் – உயிரை பணயம் வைத்து கணக்கெடுக்கும் வன ஊழியர்கள்!

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் முன்பருவ மழைக்காலத்திற்கான வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணியில் வன ஊழியர்கள் உயிரை பணயம் வைத்து ஈடுபட்டு வருகின்றனர். 
தென்னந்தியாவின் புலிகளின் புகலிடமாக உள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. கேரளா, கர்நாடகம் மற்றும் தமிழக மாநிலங்களிடையே யானைகள் இடம் பெயரும் முக்கிய வழித்தடமாக உள்ளது. பவானிசாகர் வனப்பகுதியில் ஓடும் வற்றாத மாயாறும், நீர்நிலைகளும் யானைகளுக்கு நல்லதொரு சூழலை ஏற்படுத்தியுள்ளன. இவ்வனத்தில் உள்ள தாவர உண்ணிகள் மற்றும் மாமிச உண்ணிகள் குறித்த கணக்கெடுப்பு ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படும். அதாவது ஜூன் மாதம் முன் பருவமழைக்காலம், ஜனவரி மாதம் பின் பருவமழைக்காலம் எனக் கணக்கெடுக்கப்படும்.
image
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகள் கணக்கெடுப்பை சவால் நிறைந்த பணியாக வனத்துறையினர் தெரிவிக்கின்றனர். முன்பருவ மழைக்காலத்திற்கான (Pre Monsoon) வன விலங்குகள் கண்காணிக்கும் பணிகள் துவங்கியது. இதில் 3 நாட்கள் பகுதிவாரி கணக்கெடுப்பும், 3 நாட்கள் நேர்கோட்டு பாதை கணக்கெடுப்பும் தொடர்ந்து நடைபெற்றது.
image
இதில் வனவர் மற்றும் வனக்காப்பாளர், வனக்காவலர் மற்றும் வேட்டைத்தடுப்பு காவலர் என 4 பேர் கொண்ட குழுவினர் கணக்கெடுப்பில் ஈடுபட்டனர். நேர்கோட்டுப்பாதை கணக்கெடுப்பின் படி 2 கிமீ தூரம் வரை எதிரில் தென்படும் யானைகள், காட்டெருமைகள், மான்கள் சிறுத்தைகளை கணக்கிட்டு பதிவு செய்தனர். விளாம்கோம்பை என்ற அடர்ந்த காட்டுப்பாதையில் யானையின் பிளிறல் சப்தம்கேட்டு அதனை பதிவு செய்தனர்.
image
புலிகள் மற்றும் பெரிய தாவர உண்ணிகள் மற்றும் மாமிச உண்ணிகளின் எச்சம், கீறல், கால்தடங்கள், வனவிலங்குகளை நேரடியாக பார்த்தல் போன்றவற்றை எம்ஸ்டிப் எனப்படும் செல்போனில் பதிவு செய்தனர். அதிநவீன கேமராக்கள், எம்ஸ்டிப், வியூ பைன்டர், ஜிபிஎஸ் கருவி உள்ளிட்டவைகளை பயன்படுத்தி கணக்கெடுப்பு பணி நடைபெற்றது. கணக்கெடுப்பின்போது துப்பாக்கி ஏந்திய வனப்பணியாளர் வழிநடத்தி சென்றார். யானைகள், புலிகள் தென்படும் இடங்களில் கணக்கெடுப்பு பணியாளர்களுக்கு வயர்லெஸ் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டு எச்சரிக்கையாக செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது.
image
விலங்குகள் மனித மோதலின்றி சவால் பணி நிறைந்த கணக்கெடுப்பில் யானையின் கால்தடம், புலியின் எச்சம், சிறுத்தை நடமாட்டம் மற்றும் கழுதைப்புலியின் கால்தடம் ஆகியவை பதிவு செய்யப்பட்டன. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வனவிலங்குகள் கணக்கெடுப்பின்போது வன ஊழியர் மற்றும் சமூக ஆர்வலர் என 2 பேர் யானை தாக்கி உயிரிழந்தனர். இதையடுத்து பாதுகாப்பு கருதி வனஊழியர்கள் தவிர எவரும் இதில் பங்கேற்க தடைவிதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.