கவுகாத்தி: சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் தங்கியிருந்த அசாம் மாநில கவுகாத்தி சொகுசு விடுதியின் பில் ரூ. 70 லட்சம் என்றும், 8 நாளாக செலவான சாப்பாட்டு செலவு ரூ.22 லட்சம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 10 நாட்களாக நீடித்து வந்த அரசியல் நெருக்கடி தற்போதைக்கு முடிவுக்கு வந்துள்ளது. முன்னதாக அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள ஐந்து நட்சத்திர விடுதியில் தனது ஆதரவாளர்களுடன் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே (உத்தவ் தாக்கரே அரசில் அமைச்சராக இருந்தவர்) தங்கியிருந்தார். கிட்டதட்ட எட்டு நாட்களாக சுமார் 50 ஆதரவு எம்எல்ஏக்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் தங்கியிருந்ததற்கான ஓட்டல் கட்டண விபரங்கள் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக வெளியான செய்தியில், ‘மகாராஷ்டிரா எம்எல்ஏக்கள் 50 பேர் 70 அறைகளில் 8 நாட்கள் தங்கியிருந்தனர். அவர்கள் ஓட்டலில் இருந்து செக் அவுட் செய்வதற்கு முன் முழு பில் தொகையையும் செலுத்திவிட்டனர். ஜூன் 22 முதல் ஜூன் 29ம் தேதி வரை ஓட்டலின் பல்வேறு தளங்களில் மொத்தம் 70 அறைகளில் தங்கியிருந்த அவர்களுக்கு பல்வேறு வசதிகள் செய்யப்பட்டிருந்தன. ஏக்நாத் ஷிண்டே மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்களுக்கான உணவு கட்டணம் மட்டும் (8 நாட்கள்) சுமார் ரூ.22 லட்சமாகும். சுப்பீரியர் மற்றும் டீலக்ஸ் உட்பட இரண்டு வகை அறைகளிலும் எம்எல்ஏக்கள் தங்கியிருந்தனர். ஸ்பா போன்ற கட்டணம் வசூலிக்கக்கூடிய எந்த சொகுசு வசதிகளையும் அவர்கள் பயன்படுத்தவில்லை. மொத்தத் தொகை சுமார் ரூ.68 லட்சம் இருக்கும். இருந்தும் மொத்த பில் குறித்து ஓட்டல் அதிகாரிகள் முழு விபரங்களை வெளியிடவில்லை என்றாலும் கூட, ஏக்நாத் ஷிண்டே ஆதரவு எம்எல்ஏக்கள் தரப்பில் ரூ.68 முதல் 70 லட்சம் வரை கொடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.