தஞ்சை: காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி 50 சதவீதம் முடிவடைந்துள்ள நிலையில், நிகழாண்டில் குறுவை நெற்பயிருக்கான காப்பீடு குறித்த அறிவிப்பு தமிழக அரசிடம் இருந்து எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் காத்திருக்கின்றனர்.
காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் குறுவை, சம்பா மற்றும் தாளடி ஆகிய பருவங்களில் நெல் சாகுபடி செய்து வருகின்றனர். இதற்காக ஆண்டுதோறும் மேட்டூர் அணை ஜூன் 12-ம் தேதி திறக்கப்படுவது வழக்கம்.ஆனால், நிகழாண்டு மேட்டூர் அணைக்கு மே மாதம் இறுதியில் அதிகளவு தண்ணீர் வந்ததால், வழக்கத்துக்கு மாறாக மே 24-ம் தேதி முன்கூட்டியே பாசனத்துக்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
இதையடுத்து, டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கான பணிகளை விவசாயிகள் தொடங்கினர். டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் 5.20 லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அதற்கான பணிகளை வேளாண் துறையினர் முடுக்கி விட்டனர்.
இந்நிலையில், குறுவை சாகுபடியில் டெல்டா மாவட்டங்களில் 50 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. ஜூலை மாதம் இறுதி வரை நெல் நடவு செய்யப்படுவது குறுவை பருவத்தில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். ஜூன் மாதம் நெல் நடவு செய்தால், செப்டம்பர் முதல் நவம்பர் மாதம் வரை அறுவடை செய்ய முடியும். அக்டோபரில் பருவ மழை பெய்யக்கூடும். இதனால், அறுவடை பாதித்து மகசூல் இழப்பு ஏற்படும்.
விவசாயிகளுக்கு ஏற்படும் இந்த இழப்பை ஈடுகட்ட விவசாயிகள் பயிர்க் காப்பீடு செய்வது வழக்கம். பயிர்க் காப்பீடு பிரீமியத்தை விவசாயிகள் கூட்டுறவு சங்கங்களில் கடன் பெறும்போது பிடித்தம் செய்து கொள்வார்கள். அதேபோல, கடன் பெறாத விவசாயிகள் இ-சேவை மையங்களில் பயிர்க் காப்பீடு பிரீமியம் செலுத்துவது வழக்கம்.
ஆனால், கடந்தாண்டு மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்புத் தொகை தொடர்பாக விகிதாச்சாரத்தில் உடன்பாடு ஏற்படாததால், பயிர்க் காப்பீடு செய்ய இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை. இதனால், குறுவை பருவத்தில் பயிர்க் காப்பீடு திட்டத்தை செயல்படுத்த முடியாமல் போனது.
விவசாயிகள் அஞ்சியது போலவே அக்டோபர்-நவம்பர் மாதங்களில் டெல்டாவில் மழை பாதிப்பால் அறுவடை பாதிக்கப்பட்டு, விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்தனர். அப்போது, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு, ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் நிவாரணம் வழங்குவதாக அறிவித்தார்.
எனவே, கடந்த ஆண்டைபோல இல்லாமல், நிகழாண்டு குறுவை நெற்பயிருக்கு பயிர்க் காப்பீடு செய்வது தொடர்பாக தமிழக அரசு உடனடியாக மத்திய அரசிடமும், இன்சூரன்ஸ் நிறுவனங்களிடமும் பேசி பயிர்க் காப்பீடு செய்ய உரிய ஏற்பாடுகளை விரைவில் செய்ய வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இதுகுறித்து தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர் சுவாமிமலை சுந்தரவிமல்நாதன் கூறும்போது, “குறுவை பருவத்தில் அறுவடை நேரத்தில் விவசாயிகள் பாதிக்கக் கூடிய சூழல் இருப்பதால், பயிர்க் காப்பீடு செய்கின்றனர். பயிர்க் காப்பீடை பொறுத்தவரை மத்திய, மாநில அரசுகள் தலா 49%, விவசாயிகள் 2% என மூவரும் சேர்ந்த தங்களது பங்களிப்பு தொகையை இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு செலுத்துகின்றனர்.
கடந்த ஆண்டுக்கு முன்புவரை மத்திய அரசு தனது பங்களிப்பு தொகையை சரியாக வழங்கி வந்த நிலையில், கடந்தாண்டு மத்திய அரசு 33% தான் வழங்க முடியும், மீதமுள்ள விகிதாச்சாரத்தை மாநில அரசே செலுத்த வேண்டும் எனக் கூறியதால், விகிதாச்சார வேறுபாடு காரணமாக, கடந்தாண்டு குறுவை பருவத்தில் பயிர்க் காப்பீடு திட்டத்தை செயல்படுத்த முடியாமல் போனது.
குறுவை பருவத்தில் பயிர்க் காப்பீடு செலுத்த ஜூலை 31-ம் தேதி இறுதி நாளாகும். ஆனால், தமிழக அரசு இன்னும் பயிர்க் காப்பீடு தொடர்பாக எந்த முடிவும் எடுக்கவில்லை. தமிழக அரசு அறிவித்தால் தான், அதன்பிறகு கிராம நிர்வாக அலுவலர்களிடம் சாகுபடி செய்ததற்கான சான்றிதழ்கள் பெற்று, பின்னர் இ-சேவை மையங்களில் பயிர்க் காப்பீடு பிரீமியம் செலுத்த முடியும். இதற்கான கால அவகாசம் குறைவாக இருக்கிறது. எனவே, தமிழக அரசு காலம் தாழ்த்தாமல் குறுவைக்கான பயிர்க் காப்பீடு திட்டம் குறித்து உடன் அறிவிக்க வேண்டும்.
அதேபோல, கூட்டுறவு சங்கங்களில் நிகழாண்டுக்கு பயிர்க் கடனும் இன்னும் வழங்கவில்லை. பயிர்க் கடன் வழங்கினால், எவ்வளவுத் தொகை பயிர்க் காப்பீட்டுக்கு பிடித்தம் செய்யப்படும் என்பது தெளிவாக தெரியாததால், கடன் வழங்குவதிலும் காலதாமதம் ஏற்படுகிறது” என்றார்.
இதுதொடர்பாக வேளாண்மைத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “தமிழக அரசு பல்வேறு இன்சூரன்ஸ் நிறுவனங்களிடம் இதுதொடர்பாக பேசி வருகின்றது. பேச்சுவார்த்தை முடிந்ததும், விரைவில் குறுவைக்கான பயிர்க் காப்பீடு செய்வது குறித்து அறிவிப்பு வெளியாகும்” என்றனர்.