கோத்தகிரி: உச்ச நீதிமன்ற உத்தரவு, விதிகளை மீறி, கோத்தகிரி அருகே காப்புக்காட்டை ஒட்டிய பகுதியில் சாலை உள்ளிட்ட கட்டுமானப் பணிகள் நடைபெறுவதாக இயற்கை ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
காப்புக்காடுகளை சுற்றியுள்ள ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு சூழல்மண்டலம் அமைக்க வேண்டும் என்றும், அந்த இடத்தில் எந்தவிதகட்டுமானப் பணிகளும் நடைபெறக்கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே ஈளாடா பகுதியில், உச்ச நீதிமன்றவிதிகளை மீறி கட்டுமானங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக,தனியார் நிறுவனம் அப்பகுதியில் காட்டேஜ் அமைத்து வருகிறது. இந்த பகுதி புலி மற்றும் பிற கானுயிர்கள் நடமாடும் முக்கிய பகுதி. நான்கு புறமும் காப்புக்காடுகளால் சூழப்பட்ட இந்த இடம், தனியாருக்கு சொந்தமானது எனக் கூறப்படுகிறது.
அதேசமயம், சாலை அமைத்தல் உள்ளிட்ட கட்டுமானங்களை, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி வனத்துறையால் தடுத்து நிறுத்த முடியும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
இதுதொடர்பாக லாங்வுட் சோலை பாதுகாப்பு குழு ஒருங்கிணைப்பாளர் கே.ஜே.ராஜு கூறும்போது, “பல ஆண்டுகளுக்கு முன்பு லாங்வுட் சோலையை ஒட்டியுள்ள தனியார் நிலத்தில் மருத்துவமனை கட்ட முனைந்தபோது, மலைப்பகுதி பாதுகாப்பு ஆணையத்திடம் அனுமதி பெற வேண்டுமென அன்றைய மாவட்ட ஆட்சியர் சுப்ரியா சாஹு உத்தரவிட்டதால், அந்த கட்டுமானம் தடுத்து நிறுத்தப்பட்டது.
அதேபோல, தற்போது ஈளாடா பகுதி கட்டுமானங்களையும் ‘ஹாகா’ அனுமதி பெற்ற பின்னர் தொடரலாம் என வனத்துறையும், மாவட்ட ஆட்சியரும் உத்தரவிட்டால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும். இதன்மூலமாக, புற்றீசல்போல பெருகும் காட்டேஜ் கட்டுமானங்களை கட்டுப்படுத்தலாம்.
உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி தேயிலை தோட்டத்தில் சாலை அமைத்தல் உள்ளிட்ட கட்டுமானப் பணிகளை, வனத்துறை தடுக்க வேண்டும். காப்புக்காடு நடுவில் கட்டுமானத்துக்கு அனுமதி வழங்கக்கூடாது” என்றார்.
இந்நிலையில்,மேற்கண்ட பகுதியை கோத்தகிரி வருவாய் துறை அதிகாரி பியூலாஆய்வு செய்து கூறும்போது, “மீண்டும் உயர் அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளனர். ஆய்வு பணி முழுவதுமாக முடிந்தவுடன் விவரங்கள் தெரிவிக்கப்படும்” என்றார்.