கோவை: அதிகபட்ச சில்லறை விற்பனை விலையை விட அதிமான விலைக்கு குடிநீர் பாட்டில் விற்பனை செய்த உணவகத்துக்கு தொழிலாளர் துறையினர் அபராதம் விதித்துள்ளனர்.
கோவை காளப்பட்டி குரும்பபாளையம் சாலையில் தனியார் உணவகம் ஒன்று உள்ளது. இந்த உணவகத்தில் சாப்பிட வருபவர்களிடம், ஒரு லிட்டர் குடிநீர் பாட்டிலுக்கு அதிகபட்ச சில்லறை விலையைவிட (எம்ஆர்பி), கூடுதலாக ரூ.10 வசூலிக்கப்பட்டு வந்துள்ளது. இதுதொடர்பாக கோவை ‘கன்ஸ்யூமர் வாய்ஸ்’ செயலர் நா.லோகு தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையருக்கு (அமலாக்கம்) கடை ரசீதை ஆதாரமாக இணைத்து புகார் மனு அனுப்பினர்.
அதனடிப்படையில் அந்த உணவகத்தில் ஆய்வு மேற்கொண்ட அலுவலர்கள், அங்கு குடிநீர் பாட்டிலுக்கான எம்ஆர்பியான ரூ.20-ஐ விட கூடுதலாக ரூ.10 வசூலித்து வருவதை உறுதி செய்தனர். இதையடுத்து, 2009-ம் ஆண்டு எடையளவு சட்டம், 2011-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமுறை எடையளவு விதிகளின்படி அங்கிருந்த குடிநீர் பாட்டில்களை பறிமுதல் செய்ததோடு, உணவகத்துக்கு அபராதம் விதித்தனர்.
இதுதொடர்பாக அதிகாரிகள் கூறும்போது, “குடிநீர் பாட்டில் உள்ளிட்ட விலை குறிப்பிட்டுள்ள எந்த பொருளுக்கும் அதன் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் தொகை வசூலிக்கபட்டால் உரிய ரசீதுடன் புகார் அளிக்கலாம். அந்த புகாரை விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.