“மின் கட்டணம் செலுத்தவில்லை என்று அனுப்பப்படும் போலியான குறுஞ்செய்திகளை நம்பி மக்கள் ஏமாறவேண்டாம்” என்று சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் அறிவுறுத்தியுள்ளார்.
சமீபகாலமாக சைபர் கிரைம் குற்றவாளிகள் பொது மக்களின் பணத்தைக் கொள்ளை அடிப்பதற்காக புதிய யுக்தியைக் கையாண்டு வருகின்றனர். பொதுமக்களின் தொலைபேசி எண்ணுக்கு, ‘நீங்கள் கடந்த மாத மின்கட்டணத்தைச் செலுத்தாததால் உங்களின் மின் இணைப்பு துண்டிக்கப்படவுள்ளது. இதைத் தவிர்க்க மின்துறை அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளுங்கள் அல்லது இந்த எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் தொடர்புகொள்ளுங்கள்’ என்பது போன்று போலியான குறுஞ்செய்திகளை அனுப்பி மக்களை ஏமாற்றி வருகின்றனர்.
இந்தச் செய்தியை நம்பி தொடர்பு கொள்ளும் மக்களிடம் வங்கிக் கணக்குகளைப் பெற்று, பணத்தையும் பெற்று மோசடி செய்து வருகின்றனர். எனவே மக்கள் இதுபோன்ற போலியான குறுஞ்செய்திகளை நம்ப வேண்டாம் என்று சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் மின்சாரத் துறையின் வாடிக்கையாளர் பராமரிப்பு மையமான ‘TANGEDCO’ இதுபோன்ற செய்திகளை அனுப்புவதில்லை என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.