10 ஆண்டுகளில் 80 பேர் பலி?.. காவல் நிலைய மரணங்கள் குறித்து தமிழக டிஜிபி பேச்சு!

2018-ம் ஆண்டு 18 காவல்நிலைய மரணங்கள் நிகழ்ந்துள்ளதாகவும், 80 காவல்நிலைய மரண வழக்குகளில் 12 வழக்குகளில் மட்டுமே காவல்துறையினர் மீது தவறு உள்ளதால் சிபிசிஐடி விசாரிப்பதாக தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
காவல்நிலையங்களில் ஏற்படும் மரணங்களை முற்றிலும் தடுத்து காவல்நிலைய மரணங்கள் இல்லாத நிலையை உறுதி செய்யும் வகையில் காவல்துறை அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழக காவல்துறையும், குரலற்றவர்களின் குரல் என்ற அமைப்பின் சார்பில் மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள தியாகராஜர் கலைக்கல்லூரியில் கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு, தென்மண்டல காவல்துறை தலைவர் அஸ்ரா கார்க், காவல் கண்காணிப்பாளர் மனோகரன் மற்றும் காவல் ஆணையர் செந்தில்குமார் மற்றும் தென்மண்டலத்தை சேர்ந்த காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு பேசுகையில், காவல்துறை தொடங்கப்பட்டதில் இருந்தே காவல்துறை துன்புறுத்தல் புகார்கள் உள்ளது. 1902-ம் ஆண்டில் இருந்தே காவல்துறையினர் துன்புறுத்தியதாக புகார் வந்தது. கடந்த 10 ஆண்டுகளில் 80 காவல்நிலைய மரணங்கள் நிகழ்ந்துள்ளன. 2018-ம் ஆண்டு 18 காவல்நிலைய மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இதுவே அதிகபட்சமாகும். 2021-ல் 4 பேர், 2022-ல் 2 காவல் நிலைய மரணங்கள் மட்டுமே நடைபெற்று உள்ளன. காவல் மரணங்கள் நிகழக்கூடாது என்று முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். அதனை நடைமுறைப்படுத்தும் வகையில் காவல்துறையினர் செயல்பட வேண்டும்.
image
தவறு செய்யாமலேயே சில நேரங்களில் காவல்துறையினர் மீது புகார் வருகின்றன. 80 காவல்நிலைய மரணங்களில் 12 வழக்குகளில் மட்டுமே காவல்துறையினர் மீது தவறு இருந்து சி.பி.சி.ஐடி விசாரணை செய்கிறது. இதில் 12 நிகழ்வுகளில் மட்டுமே காவல்துறையினர் சம்மந்தப்பட்டு உள்ளனர். இதில் 48 காவல்துறை அதிகாரிகள் மீது குற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. சிலர் உடல்நலக் குறைவுகள், தற்கொலை செய்து கொள்வர்.
ஆனால் அதற்கும் காவல்துறை மீது குற்றம் சாட்டப்படும். காவல்நிலையத்தில் குற்றவாளிகளிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என காவல்துறையினர் தெரிந்து கொள்ள வேண்டும். காவலர்கள் உளவியலும், அறிவியலும் தெரிந்து கொள்ள வேண்டும். சிலர் தற்கொலை எண்ணத்தில் இருப்பதால் காவல்துறையினர் விழிப்புடன் இருக்க வேண்டும். தமிழ்நாடு காவல்துறை பாரம்பரிய மிக்க காவல்துறை. யாரையும் துன்புறுத்த மாட்டார்கள், அங்கொன்றும் இங்கொன்றுமாக சில சம்பவங்கள் நிகழுகின்றன அதுவும் நடைபெறாமல் இருக்க வேண்டும் என அறிவுறுத்தி வருகிறோம்.
காவல்துறை அரசாங்கத்தின் அங்கம், சட்டத்தின் பார்வையில் காவல்துறை இருக்கிறது. சட்டத்திற்கும், மனசாட்சிக்கு உட்பட்டு, காவல் கோட்டுபாட்டுக்கு உட்பட்டு காவல்துறை செயல்பட வேண்டும் என கூறினர். காவல்துறையினர் சமூகத்திற்கு முன்மாதிரியாக திகழ வேண்டும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.