வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி-‘பணிபுரியும் பெண்களுக்காக, விரைவில் கூடுதல் விடுதிகள் திறக்கப்படும்’ என, மத்திய அரசு அறிவித்துள்ளது.
இது பற்றி மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:வேலை, கல்வி உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக, பெண்கள் தங்கள் சொந்த ஊரை விட்டு, வெளியூர்களுக்கு செல்ல வேண்டிஉள்ளது. அவர்களுக்கு நம்பகமான மற்றும் வசதியான தங்குமிடங்கள் கிடைப்பதை உறுதி செய்ய, மத்திய அரசு, பணிபுரியும் மகளிர் விடுதி திட்டத்தை துவக்கியுள்ளது.
இத்திட்டத்தின் கீழ், நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் தங்கும் விடுதிக்காக புதிய கட்டடங்கள் கட்ட அல்லது தற்போதைய கட்டடங்களை விரிவுபடுத்த, மத்திய அரசு மானியம் வழங்குகிறது. புதிய விடுதிகள் கட்டுவதற்கான செலவில், 60 சதவீதத்தை மத்திய அரசு ஏற்றுக் கொள்கிறது. இந்நிலையில், பணிபுரியும் மகளிர் விடுதி திட்டத்தின் பெயர், ‘ஷக்தி நிவாஸ்’ என, மாற்றப்பட்டுஉள்ளது. ஷக்தி நிவாசில், தங்கியிருக்கும் தாயுடன், 18 வயதுக்குட்பட்ட மகளும், 12 வயதுக்குட்பட்ட மகனும் தங்கியிருக்க அனுமதிக்கப்படுவர்.
மொத்தம் 872 விடுதிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதில், 497 விடுதிகள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. கூடுதல் விடுதிகள் விரைவில் திறக்கப்படும். ஷக்தி நிவாசில் பெண்கள் வாடகை தந்து தங்கலாம்.இவ்வாறு மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
Advertisement