மணிப்பூர் நிலச்சரிவில் பலியானோர் எண்ணிக்கை 25 ஆக உயர்வு

இம்பால்,

நிலச்சரிவு

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரின் நோனே மாவட்டத்தில் துபுல் என்ற இடத்தில் ரெயில்வே கட்டுமானப் பணி நடந்துவருகிறது. கடந்த புதன்கிழமை இரவு அப்பகுதியில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது.

அப்போது அங்கு கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களும், அவர்களின் பாதுகாப்புக்காக அமர்த்தப்பட்டிருந்த ராணுவ வீரர்களும் நிலச்சரிவில் சிக்கினர்.

மறுநாள் காலை ராணுவத்தினர் உள்ளிட்ட மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப் பணியை மேற்கொண்டனர்.

25 உடல்கள் மீட்பு

நேற்று 3-வது நாளாக மீட்புப் பணி நடைபெற்றது. இதுவரை, 25 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்களில் 14 பேர் ராணுவ வீரர்கள் ஆவர். மேலும் 18 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக ராணுவத்தினர் தெரிவித்தனர்.

நிலச்சரிவு தொடர்பான வீடியோவுடன் முதல்-மந்திரி பிரேன் சிங் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘நிலச்சரிவு ஏற்பட்டுள்ள பகுதியில் இன்னும் நிலைமை கவலைக்குரியதாகத்தான் இருக்கிறது. அங்கு மோசமான வானிலை தொடர்ந்து நிலவும் என்று எதிர்பார்க்கிறோம். 38 பேர் மாயமாகி இருக்கின்றனர். அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது’ என்று தெரிவித்துள்ளார்.

தடைபட்ட ஆற்றோட்டம்

நிலச்சரிவின் இடிபாடுகளால் இஜாய் நதியின் குறுக்கே அணை கட்டியது போன்ற சூழல் ஏற்பட்டது. அதனால் அங்கு தண்ணீர் தேங்கி, அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கு அபாயம் ஏற்படும் நிலை உருவானது. எனவே, இடிபாடுகளை அகற்றி நீரோட்டத்துக்கு வழி ஏற்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது.

ராணுவ மரியாதை

மீட்கப்பட்ட ராணுவ வீரர்கள் 14 பேரின் உடல்களுக்கு முழு ராணுவ மரியாதை செலுத்தப்பட்டது.

பின்னர் 2 விமானப் படை விமானங்கள் மற்றும் ஒரு ராணுவ ஹெலிகாப்டர் மூலம் அவர்களின் உடல்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்டன. ஒரு ராணுவ வீரரின் உடல், மணிப்பூரில் கங்கோக்பி மாவட்டத்தில் உள்ள அவரது வீட்டுக்கு சாலை வழியாக அனுப்பி வைக்கப்பட்டது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.