பொதுக்குழுவில் ஓபிஎஸ்ஸை கட்சியை விட்டு நீக்க திட்டமா? – உறுப்பினர்களுக்கு அழைப்புக் கடிதம் அனுப்பும் பணி தீவிரம்

சென்னை: ஒற்றைத் தலைமைக்கு தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருவதால் ஓபிஎஸ்ஸை, 11-ம் தேதி நடைபெறும் அதிமுக பொதுக்குழுவில் கட்சியை விட்டு நீக்க இபிஎஸ் தரப்பு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுகவில் கடந்த 14-ம் தேதி முதல் ஒற்றைத் தலைமை விவகாரம் அனல் பறந்து வருகிறது. கடந்த மாதம் 23-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை சர்ச்சை முடிவுக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நீதிமன்றத்துக்கு ஓபிஎஸ் சென்றார். நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு காரணமாக ஒற்றைத் தலைமை சர்ச்சை இன்றும் நீடித்து வருகிறது.

23-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில், ஏற்கெனவே தயாரிக்கப்பட்ட 23 தீர்மானங்களைத் தவிர வேறு எந்த தீர்மானத்தையும் நிறைவேற்றக் கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அந்த கூட்டத்தில் 23 தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்டன. அதேநேரம், கட்சி அவைத் தலைவராக தமிழ்மகன் உசேனை தேர்ந்தெடுக்கும் தீர்மானம் கொண்டுவரப்பட்டு, அவைத் தலைவராக அவர் பொறுப்பேற்றுக் கொண்டார். அதன் பிறகு, ஜூலை 11-ம் தேதி மீண்டும் பொதுக்குழு நடைபெறும் என்று தமிழ்மகன் உசேன் அறிவித்தார்.

இந்நிலையில், தமிழ்மகன் உசேனை அவைத் தலைவராக நியமித்தது செல்லாது என நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தொடர்ந்துள்ளார். சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் இபிஎஸ் தரப்பு மனு தாக்கல் செய்துள்ள நிலையில், அதற்கு முன்னதாகவே, அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் தன்னை கேட்காமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது என கேவியட் மனுவை ஓபிஎஸ் தாக்கல் செய்துள்ளார்.

இவ்வாறு தொடர்ந்து, அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை ஏற்படுவதற்கும், அந்த ஒற்றைத் தலைமையை இபிஎஸ் கைப்பற்றாமல் இருப்பதற்கான அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் ஓபிஎஸ் மேற்கொண்டு, இபிஎஸ்ஸின் திட்டத்துக்கு தொடர்ந்து முட்டுக்கட்டையாக இருந்து வருகிறார். இந்நிலையில், 11-ம் தேதி நடைபெறும் பொதுக்குழுவில் ஓபிஎஸ்ஸை கட்சியை விட்டு ஏன் நீக்கக் கூடாது? என்று இபிஎஸ் தரப்பில் விவாதித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இபிஎஸ் மனைவிக்கு கரோனாதொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இபிஎஸ் கடந்த சில நாட்களாக தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளை நேரில் வர வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார். இந்நிலையில் தனிமைப்படுத்துதலை நேற்றுமுன்தினம் முடித்துக் கொண்ட இபிஎஸ், முன்னாள் அமைச்சர்கள் பி.தங்கமணி, ஆர்.பி.உதயகுமார், காமராஜ், சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன் உள்ளிட்டோருடன் சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள தனது இல்லத்தில் நேற்று ஆலோசனை நடத்தினார். அதில், 11-ம் தேதி நடைபெறும் பொதுக்குழுவில் ஓபிஎஸ்ஸை கட்சியை விட்டு நீக்குவது தொடர்பாக ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

இதற்கு வலுசேர்க்கும் விதமாக கட்சியின் வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலர் ஆர்.எம்.பாபுமுருகவேல், சில சட்ட நுணுக்கங்களை இபிஎஸ்ஸுக்கு ஏற்கெனவே தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது. அதாவது, ‘‘திமுக எதிர்ப்பு என்ற கொள்கையோடு தொடங்கப்பட்டது தான் அதிமுக. அந்த கொள்கையில் இருந்து பிசகாமல் பயணித்தவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. ஆனால் ஓபிஎஸ் பல காலகட்டங்களில் அந்த நிலையில் இருந்து விலகி வருகிறார்.

சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலினுக்கு வணக்கம் வைத்தால் கூட பரவாயில்லை. உதயநிதிக்கும் வணக்கம் வைக்கிறார். துரைமுருகனின் 50 ஆண்டுகால சட்டப்பேரவை வரலாற்று விழாவில், அவரை ஓபிஎஸ் போற்றி புகழ்ந்துள்ளார். முன்னாள் முதல்வர் கருணாநிதி படத் திறப்பு விழாவிலும், கருணாநிதியை போற்றி புகழ்ந்துள்ளார். மேலும் கட்சி செயல்பாட்டுக்கு எதிராக நீதிமன்றம் சென்றுள்ளார். அதனால் அவர் கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாகக் கூறி, கட்சியை விட்டேகூட நீக்கலாம்’’ என ஆலோசனை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

11-ம் தேதி பொதுக்குழுவை நடத்துவதில் உறுதியாக உள்ள இபிஎஸ், தான் தலைமை நிலையச்செயலர் என்ற அடிப்படையில் கையெழுத்திட்டு, பொதுக்குழு உறுப்பினர்களுக்கு, பொதுக்குழு கூட்டத்துக்கான அழைப்புக் கடிதம் அனுப்பும் பணியைத் தொடங்கியுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த பொதுக்குழுவில் ஓபிஎஸ் கட்சியிலிருந்து நீக்கப்படுவதையும், கட்சிக்கு இபிஎஸ் தலைமையில் ஒற்றைத் தலைமை உருவாவதையும் யாராலும் தடுக்க முடியாது என்பதில் இபிஎஸ் ஆதரவாளர்கள் உறுதியாக உள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.