திருப்பூர்: தமிழக வனத்துறையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வரும் வனக்காப்பாளர்கள், வனவர் பதவி வழங்க வேண்டுமென அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக வனத்துறையில் வனவர் – 1300 பேர், வனச்சரகர் – 585 பேர், வனக்காப்பாளர் – 2400 பேர், வனக் காவலர்கள் -1300 பேர் என சுமார் 6 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர்.
வனக்காப்பாளர்கள் முழுமையாக களப்பணியாற்றுபவர்கள். குறிப்பிட்ட வனப்பகுதியில் விலங்குகள் வந்தால் கண்காணிப்பது, மீட்புப் பணி, மரம் விழுந்தால் சீரமைப்பது உட்பட அனைத்து பணிகளையும் செய்பவர்கள். மாநிலம் முழுவதும் 8 முதல் 12 ஆண்டுகள் பணிபுரிந்த வனக்காப்பாளர் 300 பேருக்கு பதவி உயர்வும், அதற்கான ஊதியமும் வழங்கப்படவில்லை என வேதனை தெரிவிக்கின்றனர்.
இதுதொடர்பாக மேலும் அவர்கள் கூறும்போது, “2010 ஆக.15 தொடங்கி 2013 ஆக. 14 வரை, நேரடி நியமன வனக்காப்பாளர்களாக பணியில் சுமார் 300 பேர் சேர்ந்தோம். தமிழ்நாடு வனச்சார் நிலை பணி விதிகளின்படி, தகுதிகாண் பருவம் முடித்து பணி வரன்முறை செய்து 6 மாத வனக்காப்பாளர் பயிற்சி நிறைவு செய்து, குற்றத்தாள்கள் ஏதும் இல்லாமல் 8 ஆண்டுகள் பணி நிறைவு செய்திருந்தால், வனவராக பதவி உயர்வு பெறலாம்.
அதன்படி, 2019 ஆக.15-ம் தேதியோடு 220 பேரும், 2020 ஆக.15-ம் தேதியோடு 63 பேரும், 2021 ஆக.15-ம் தேதியோடு 10 பேரும் முழுத்தகுதி பெற்றுள்ளனர். இவர்களில், 47 வயது முதல் 50 வயதை கடந்தவர்கள் பலர் உள்ளனர். சிலர் ஓய்வு வயதை எட்டிக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில், அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை 58-லிருந்து 60-ஆக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும், விலங்குகளிடம் இருந்து தாக்குதல், மனிதர்களிடம் இருந்து தாக்குதல் என தற்போது பணி பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. பலர் மன உளைச்சலில் பணிபுரிகின்றனர்.
காவல் துறையில் போலீஸாருக்கு வழங்கியதைபோல, வனக் காப்பாளர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் சுழற்சி அடிப்படையில் விடுப்பு, மாவட்டத்துக்குள் பயணிக்க இலவச பேருந்து பயண அட்டை உள்ளிட்ட வசதிகளை செய்துதர வேண்டும்” என்றனர்.
இதுதொடர்பாக வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் கூறும்போது, “வனத்துறை ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக, கடந்த 4 நாட்களுக்கு முன்பு நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் பேசினோம். காலி இடங்கள் உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்தும் பேசினோம். அவர்கள் கோரிக்கைகளை அரசு பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கும்” என்றார்.