மேட்டூர் அணை பூங்கா அருகே மீன் கடைகளில் வைத்திருந்த கெட்டுப்போன மற்றும் ரசாயனம் கலந்த 100 கிலோ மீன்களை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் பூங்காவிற்கு உள்ளூர் மட்டுமின்றி சேலம், ஈரோடு, நாமக்கல், தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் வந்து செல்வது வழக்கம். அப்படி மேட்டூருக்கு வருபவர்கள் அணை மற்றும் பூங்காவை சுற்றிப் பார்த்துவிட்டு பூங்காவிற்கு எதிரே சாலையோரம் உள்ள சிற்றுண்டி கடைகளில் விற்கப்படும் மீன்களை விரும்பி சாப்பிடுவர்.
ஆனால் அந்த பகுதியில் மீன்கடை நடத்தி வருபவர்கள் மசால் கலந்த மீன்களை வாரக் கணக்கில் பதப்படுத்தி வைத்து விற்பதாக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு புகார் சென்றுள்ளது. இந்நிலையில் நேற்று மாலை உணவு பாதுகாப்புத் துறை அலுவலர் குமரகுருபன் தலைமையில் ஐந்து பேர் கொண்ட அதிகாரிகள் பூங்காவிற்கு எதிரே உள்ள சிற்றுண்டி கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது கெட்டுப்போன மற்றும் ரசாயனம் கலந்து விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த சுமார் 100 கிலோ மீன்களை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து நகராட்சி வாகனங்களில் ஏற்றினார்கள். இதற்கு மீன் கடைக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சாலையோர வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தனர்.
இதைத் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட மீன்களை நகராட்சி வாகனத்தில் எடுத்துச் சென்று அழித்தனர். இதனால் மேட்டூர் அணை பூங்கா பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM