கார்பன் சமநிலை: மத்திய அமைச்சர் புது ஐடியா!

பருவநிலை மாற்றம் தொடர்பான COP26 உச்சிமாநாட்டில் பிரதமர் திரு.நரேந்திரமோடி அளித்த வாக்குறுதிப்படி, 2030-க்குள் புதைபடிம எரிபொருள் பயன்பாடு அல்லாத 500ஜிகாவாட் மின் உற்பத்தித் திறனை இந்தியா அடைவதற்கு, “கார்பன் சமநிலை“ கட்டட கட்டுமான ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை ஊக்குவிப்பதோடு, அவற்றை தொழில்துறையுடன் இணைக்க வேண்டுமென, மத்திய அறிவியல்- தொழில்நுட்பம் மற்றும் புவி அறிவியல் துறை இணையமைச்சர் ஜிதேந்திரசிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தூய்மை எரிசக்திக்கான இந்தோ-அமெரிக்க கூட்டு முயற்சியான, சூரியசக்தி டெகத்லான் இந்தியா விருது வழங்கும் விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று உரையாற்றிய ஜிதேந்திர சிங், அசாதாரண பருவநிலை நிகழ்வுகளுக்கு தீர்வுகாணும் விதமாகவும், உயிர் மற்றும் உடமை இழப்புகளைக் குறைக்கவும், இந்தியாவின் பருவகால மண்டலம் மற்றும் தனித்துவ தேவைகளுக்கு ஏற்ற புதுமையான, குறைந்த செலவிலான தீர்வுகாண முன்வருமாறு, ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள், கட்டுமான நிறுவனத்தினர், தொழில்துறையினர் மற்றும் கல்வியாளர்களை வலியுறுத்தியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி, ஸ்டாட்ர்ட்-அப் நிறுவனங்களுக்கு முழு ஆதரவு அளித்து வருவதோடு, பருவநிலை மாற்றம் உட்பட நாடு எதிர்கொள்ளும் சவால்களுக்கு தீர்வுகாணுமாறு வேண்டுகோள் விடுத்ததையும் அமைச்சர் ஜிதேந்திர சிங் சுட்டிக்காட்டினார்.

எரிசக்தி சிக்கன கட்டடங்களை உருவாக்கக்கூடிய அடுத்த தலைமுறை கட்டுமான வல்லுநர்கள், பொறியாளர்கள் மற்றும் தொழில்முனைவோரை உருவாக்க, சூரியசக்தி டெகத்லான் இந்தியா உதவுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்தியாவின் பருவநிலை மாற்ற இலக்குகளுக்கு ஆதரவளிப்பதோடு, அமெரிக்கா – இந்தியா நீடித்த தூய்மையான எரிசக்தி ஒத்துழைப்பின் இலக்குகளை அடைவதற்கான முன்னேற்றத்தை விரைவுபடுத்தவும் சூரியசக்தி டெகத்லான் இந்தியா உதவிகரமாக உள்ளது என்றும் அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.