குடியரசு துணைத் தலைவர் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில், பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் அமீரந்தர் சிங் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
குடியரசுத் தலைவர் தேர்தல், வரும், 18 ஆம் தேதி நடக்க உள்ளது. இதைத் தொடர்ந்து, குடியரசுத் துணை தலைவர் பதவிக்கான தேர்தல், அடுத்த மாதம் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு, ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பழங்குடியினத்தைச் சேர்ந்த, ஜார்க்கண்ட் முன்னாள் ஆளுநர் திரெளபதி முர்முவை, தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக அறிவித்துள்ளது. எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா அறிவிக்கப்பட்டு உள்ளார்.
குடியரசு துணை தலைவர் தேர்தலில், லோக்சபா மற்றும் ராஜ்யசபாவின் எம்.பி.,க்கள் மற்றும் நியமன எம்.பி.,க்கள் ஓட்டளிக்க உள்ளனர். போதிய பலம் இருப்பதால், பாஜக நிறுத்தும் வேட்பாளர் வெற்றி பெறுவது உறுதியாகி உள்ளது. குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு மீண்டும் வழங்கப்படாது எனக் கூறப்படுகிறது. இதற்கிடையே காங்கிரஸ் அதிருப்தி தலைவர் குலாம் நபி ஆசாத், பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி உள்ளிட்ட சிலரின் பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியில் நீண்ட காலம் இருந்த பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் அமரீந்தர் சிங், வேட்பாளராக நிறுத்தப்படலாம் என்றும் பேசப்படுகிறது. காங்கிரஸ் சார்பில் முதலமைச்சராக இருந்த அவர், கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த நவ்ஜோத் சிங் சித்துவுடன் ஏற்பட்ட மோதலில், தன் பதவியை இழந்தார்.
பின், பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற புதுக்கட்சியை தொடங்கிய அமரீந்தர் சிங், பாஜகவுடன் கூட்டணி அமைத்து சட்டசபை தேர்தலை சந்தித்தார். தற்போது முதுகுவலிக்கு சிகிச்சை பெற ஐரோப்பிய நாடான பிரிட்டனின் லண்டன் நகருக்கு சென்றுள்ளார். சமீபத்தில் அவருக்கு அறுவை சிகிச்சை நடந்தது. இதைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி, தொலைபேசியில் அவரை தொடர்பு கொண்டு உடல்நிலை குறித்து விசாரித்தார்.
இந்நிலையில், குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் வேட்பாளராக அமரீந்தர் சிங் நிறுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக பாஜக மூத்த தலைவர்கள் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, தாயகம் திரும்பியதும், பஞ்சாப் லோக் காங்கிரஸ் கட்சியை, பாஜகவுடன் இணைக்க, அமரீந்தர் சிங் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.