மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தலைவராக பாஜகவின் ராகுல் நர்வேகர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பேரவையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் அவர் 164 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
மகாராஷ்டிரச் சட்டப்பேரவையின் இரண்டு நாள் சிறப்புக் கூட்டம் இன்று தொடங்கியது. முதலமைச்சர் ஏக்நாத் சிண்டே தலைமையிலான சிவசேனா சட்டமன்ற உறுப்பினர்களும், அவரை ஆதரிக்கும் சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர்களும் தங்கியிருந்த டிரைடென்ட் விடுதியில் இருந்து நேராகச் சட்டப்பேரவைக்கு வந்தனர். அனைவரும் ஒரேபோல் காவித் தலைப்பாகை அணிந்து வந்தனர்.
துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் அவைக்கு வந்தனர். சிவசேனா சட்டமன்ற உறுப்பினர் ஆதித்ய தாக்கரேயும் இன்றைய கூட்டத்தில் கலந்துகொண்டார். பேரவைத் தலைவர் பதவிக்கு பாஜகவின் ராகுல் நர்வேகர், சிவசேனாவின் ராஜன் சால்வி ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்த நிலையில் அதற்கான வாக்கெடுப்பு நடைபெற்றது.
பாஜகவின் ராகுல் நர்வேகர் 164 வாக்குகளுடன் பேரவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அவருக்கு எதிராக 107 வாக்குகள் பதிவாகின. சமாஜ்வாதி, மஜ்லிஸ் கட்சி உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் இருந்து விலகிக் கொண்டனர்.
சபாநாயகர் தேர்தலில் பாஜக வேட்பாளர் அதிக வாக்குகளுடன் வெற்றிபெற்றுள்ளதால் நாளை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பிப்பிலும் ஏக்நாத் சிண்டே அரசு எளிதாக வெற்றிபெறும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.