மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவை சபாநாயகராக, பாஜக எம்எல்ஏ ராகுல் நர்வேகர் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
மகாராஷ்டிர மாநில முதலமைச்சராக இருந்த சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக, அக்கட்சியைச் சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே, தனது ஆதரவு எம்எல்ஏக்களை திரட்டிக் கொண்டு போர்க்கொடி தூக்கினார். இதனால், உத்தவ் தாக்கரே தலைமையிலான கூட்டணி அரசு பெரும்பான்மை இழந்தது. இதை அடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு, முதலமைச்சர் மற்றும் எம்எல்சி பதவியை ராஜினாமா செய்வதாக, உத்தவ் தாக்கரே அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சி பாஜக ஆதரவுடன், சிவசேனா அதிருப்தித் தலைவர் ஏக்நாத் ஷிண்டே, மகாராஷ்டிர மாநிலத்தின் முதலமைச்சராக பதவி ஏற்றார். துணை முதலமைச்சராக, பாஜக மூத்தத் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான தேவேந்திர பட்னவிஸ் பதவியேற்றார்.
முதலமைச்சராக தேவேந்திர பட்னவிஸ் பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஏக்நாத் ஷிண்டே பதவியேற்றது, அதிரடி திருப்பமாக மாறியது. இதை அடுத்து, மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவையில் நாளை பெரும்பான்மையை நிரூபிக்கும்படி, முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு, அம்மாநில ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி உத்தரவு பிறப்பித்தார்.
இந்நிலையில் இன்று, மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவைக்கு புதிய சபாநாயகரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் சட்டப்பேரவையில் நடைபெற்றது. இந்தத் தேர்தலில், பாஜக எம்எல்ஏ ராகுல் நர்வேகர், மகா விகாஸ் அகாதி கூட்டணி சார்பில் ராஜன் சல்வி ஆகியோர் போட்டியிட்டனர். இதில், 164 எம்எல்ஏக்களின் ஆதரவுடன், பாஜக எம்எல்ஏ ராகுல் நர்வேகர், சட்டப்பேரவையின் சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார். வெறும், 107 எம்எல்ஏக்களின் ஓட்டுகள் மட்டுமே, ராஜன் சல்விக்கு கிடைத்தது.
மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில், பாஜக எம்எல்ஏ ராகுல் நர்வேகர், சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டு உள்ளது, முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.