தமிழக அரசு வழங்கும் 2021ம் ஆண்டின் கிரீன் சாம்பியன் விருதை பெற்றிருக்கிறார் திநெல்வேலியைச் சேர்ந்த முனைவர் ஆ. திருமகள். 2010ம் ஆண்டு முதல் 2022 வரை சுமார் 22 ஆயிரம் மரங்களை நட்டு அதை பராமரித்து வருகிறார். விதைகளை சேரகரித்து விதை பந்துகளை உருவாக்குவது, வீட்டிலே மரக்கன்றுகளை உருவாக்கி, அதை நட்டு பராமரித்தும் வருகிறார். இந்தியன் எக்ஸ்பிரஸ். காம்-காக அவரை சந்திக்க சென்றிருந்தோம். மரங்கள் சூழ, மான்கள் துள்ளி குதித்தோட, நிழல் நிறைந்த சாலையில் மாணவர்கள் நடந்து வர, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக வளாகத்தின் எழில் கொஞ்சும் அழகு நம்மை வரவேற்றது. சில துறைகளை தாண்டி அமைந்திருந்த நூலகத்தில் தனது பணியை மும்மூரமாக செய்துகொண்டிந்தார். மேடம் கொஞ்சம் பேசனும் என்றதும் ‘கொஞ்சம் காத்திருங்க வேலைகளை முடித்துவிட்டு வருகிறேன்.
என்று கனிவாகச் சொன்னார். வேலை முடித்த கையோடு வாங்களேன் வெளியே சென்று பேசலாம் என்றார். மரங்களுக்கு நடுவில் இருக்கும் மேசையில் அமர்ந்து பேசத்தொடங்கினோம். ” நூலகம் இந்த இடத்திற்கு மாற்றப்பட்ட பிறகு. வெறும் கட்டாந்தரையாக இருந்தது. இப்போது பார்த்தீங்களா முழுவதும் மரம் இருக்கு. நீங்கள் பல்கலை கழகத்தை நுழைந்தவுடன் வரிசையாக மரங்கள் இருக்கும். அதை நட்டு, பராமறித்தும் வருகிறோம். வளாகத்திற்கு உள் இருக்கும் வங்கிக்கு முன்பாகவும், துறைகளுக்கு முன்பாகவும் மரங்களை நட்டு அதை சொட்டு நீர் பாசனம் மூலம் பராமறித்து வருகிறோம். பல்கலைக்கழக வளாகத்திற்குள் இரண்டு சிறிய குளங்களை ஜேசிபி மூலம் வெட்டி உள்ளோம்” என்றார்.
மேலும் இவர் மாணவிகள் தங்கும் விடுதியிலும் பழம் தரும் மரங்களை நட்டு வளர்த்துள்ளார். விடுதியில் பயன்படுத்தப்பட்ட கழிவு நீரை, செடிகளுக்கு பாய்ச்சி, அதன் மூலம் செடிகளை வளர்த்து வருகிறார். 2010ம் ஆம் ஆண்டு பல்கலைகழகத்தில் நூலகராக பணியாற்ற தொடங்கியது முதல் இவர் 22 யிரத்திற்கும் மேற்பட்ட மரங்களை நட்டுள்ளார். தனது சொந்த பணத்தை இதற்கு செலவிட்டுள்ளார். ஜேசிபி அமர்த்தி இடங்களை சுத்தம் செய்வது, ஆட்களை வைத்து மரங்களை நடுவது என்று இவர் செய்த பணிகள் ஏராளம்.
”புக்கன், வேம்பு, பாதாம், சரக்கொன்றை, வில்வம், மனோசஞ்சீதம், மகிழம், பூவரசு, இலுப்பை இப்படி பல மரங்களை தேடி வாங்குவேன். வீட்டிற்கு அருகில் இருக்கும் குழந்தைகள் விதைகளை என்னிடம் தருவார்கள். இதை வைத்து விதை பந்துகளை உருவாக்கி பல்கலைக்கழக வளாகத்திற்குள் தூவுவோம். சமீபத்தில்தான் 6,500 விதை பந்துகள் செய்து அதை தூவினோம். ஒவ்வொரு மரத்திற்கு ஒரு குணம் இருக்கிறது.
’ஆளே இல்லா ஊருக்கு இலுப்பை பூ சக்கரை’ என்று கூறுவார்கள். ஒரு டன் இலுப்பையிலிருந்து 400கிலோ சக்கரை எடுக்க முடியும். இலுப்பை விதையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் கொசுவை விரட்டும். முன்பெல்லாம் வீட்டில் இலுப்பை எண்ணெய்யில் தான் விளக்கு ஏற்றுவார்கள். இலுப்பை பழம் வௌவால்களுக்கு மிகவும் பிடிக்கும். வெளவால் இருந்தால் கொசு வராது. இலுப்பை மரத்தின் அழிவு, வெள்வாலின் அழிவு. வெளவால் அழிவுதான் நோய் பெருக்கத்திற்கு காரணம். பூவரசு மரம் மானிற்கு மிகவும் பிடிக்கும். வீட்டில் ஆடு குட்டி போட்டால், பூவரசு மரத்தின் இலையைத்தான் சாப்பிடக்கொடுப்பார்கள். பெண்கள் இருக்கும் வீட்டில் பூவர மரம் நிச்சயம் இருக்க வேண்டும் என்றார்.
பல்கலைக்கழக வளாகத்திற்குள் மட்டுமல்லாமல், துலுக்கர்பட்டி என்ற கிராமத்தில் மரக்கன்றுகளை, மக்களுக்கு கொடுத்து. செடியை பாதுகாக்க கம்பி கூண்டு, அதை சுற்ற சேலை ஆகியவற்றையும் வாங்கிக்கொடுத்து மரம் வைத்திருக்கிறார். 2018ம் ஆண்டில் அரசு பள்ளி மாணவர்களிடம் மரக்கன்றுகள் கொடுத்து அதை நடும் பணிகளை மேற்கொண்டுள்ளார். அவர் வசித்து வரும் காந்திநகர் பகுதியில் உள்ள பூங்காக்களில் மரங்களை நட்டு அதை முறையாக பராமரித்து வருகிறார்.
அவர் செய்த பணிகளை நம்மிடம் கூறும்போது மிக எளிமையாக இது தெரிந்தாலும். அவர் சந்தித்த அவமானங்கள் ஏராளம். ’நீங்க என்னம்மா லூசா, இப்படி சொந்த காசல செலவு பன்னுரீங்களே’ என்று பலர் தன்னிடம் கேட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
2010ம் ஆண்டு முதல் இப்போதுவரை எது உங்களை இப்படி செயல்படத் தூண்டுகிறது என்று கேட்டபோது. ‘ என்னிடம் இருப்பதால் நான் செய்கிறேன். மரங்களை நான் என் குழந்தைகளாக பார்க்கிறேன். மரத்தைப் பார்த்தால் என் துயரம் எல்லாம் நீங்கிவிடும். தீபாவளி, பொங்கல் என்ற பண்கைக்கு புதுத் திணிகள் எடுக்க மாட்டேன் அந்தத் தொகையை மரக்கன்றுகள் வாங்க செலவிடுவேன். மாத சம்பளத்தில் 10% இதற்கு என்று எடுத்து வைப்பேன். மருத்துவமனைக்கு செலவிடும் நிலை எனக்கு வரவில்லை. அந்தத் தொகையையும் மரம் நடவே செலவிடுவேன். விதைகள் வளர்ந்தால் மரமாகும். வளராவிட்டால் உரமாகும். என்றார்.
உரையாடலின் நடுவே “ பார்த்தீங்கள இப்போதான் வச்சோம் என் அம்மு காய்த்துவிட்டது “ என்று புன்னகை கொஞ்ச நம்மிடம் பகிர்ந்துகொண்டார். இன்னும் ஒரு வருடத்தில் பணி ஓய்வு காலத்தை நெருங்க உள்ள அவரிடம் கேட்டோம் இனி என்ன பண்ணனும்னு நினைக்குறீங்க என்றோம் “ நாங்கள் வெட்டிய இரண்டு குளங்களை தூர்வார வேண்டும். மியோவாக்கி காடுகளை போன்ற அடர் காடுகளை உருவாக்க வேண்டும் என்றார். உரையாடலின் இறுதியில் கையோடு தன்னிடம் இருந்த மரக்கன்று ஒன்றை தந்து, இதை வீட்டுல வச்சு வளர்த்துருங்க. ஒழுங்க தண்ணீர் ஊற்றனும் என்று கூறி நம்மிடம் எதிர்காலத்தின் ஒரு வித்தையும் கொடுத்துவிட்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“