மீண்டும் ஒரு கொடூர விபத்து… கல்லட்டி பாதையின் அபாயத்தை இனியாவது உணர்வோமா?

உதகை கல்லட்டி மலைப்பாதையில் நேற்று இரவு நேரத்தில் 30 அடி பள்ளத்தில் டெம்போ டிராவலர் வேன் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டிருந்தது. இதில் சென்னையை சார்ந்த மென்பொறியாளர் ஒருவர் உயிரிழந்தார். சென்னை சோலிங்கநல்லூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மென்பொறியியல் நிறுவனத்தை சேர்ந்த 18 பேர் உதகையை சுற்றி பார்க்க சென்றபோது இச்சம்பவம் நடந்திருக்கிறது.
சில தினங்களுக்கு முன் புதிய தலைமுறை டிஜிட்டல் யூ-ட்யூப் தளத்தில், கல்லட்டி சாலை பற்றியும் அங்கு ஏற்படும் விபத்துகள் பற்றியும் சில முக்கிய விஷயங்களை கூறியிருந்தோம். குறிப்பாக `இந்த சாலையை பற்றி தெரியாதவர்கள் இதில் பயணிப்பதை தவிர்க்க வேண்டும். விபத்துகள் ஏற்பட அமானுசிய சக்திகளோ, அல்லது மாய மந்திரங்களோ காரணம் கிடையாது. முற்றிலும் அறிவியல் மட்டுமே காரணமாக இருக்கிறது’ என்று கூறியிருந்தோம். வீடியோவில் சொல்லியிருந்ததே நேற்றும் கல்லட்டியில் நடந்துள்ளது.
image
கல்லட்டி வனத்துறை சோதனை சாவடியில் இருக்கிற ஆம்புலன்ஸ் ஓட்டுநர் டோனி நேற்று இரவு 9.00 மணிக்கு தொலைபேசியில் நம்மை அழைத்திருந்தார். அவர் பேசுகையில், “15 வளைவில் ஒரு வாகனம் விபத்துக்குள்ளாகி இருக்கிறது. எத்தனை பேர் என்பது தெரியவில்லை” என்று கூறினார். நாம் உடனடியாக விபத்து நடந்த இடத்திற்கு கிளம்பினோம். அப்போதுதான் சென்னையில் இருந்து நேற்று காலை நான்கு மணிக்கு டெம்போ டிராவல் வாகனத்தில் ஓட்டுநருடன் சேர்த்து 19 பேர் கிளம்பி சென்றதும், அந்த வாகனம் இரவு 9 மணி அளவில் விபத்துக்கு உள்ளாகியிருந்ததும் நமக்கு தெரியவந்தது.
விபத்தில் சிக்கியவர்களில் ஒரு பெண் உயிரிழந்து விட மற்ற 18 பேரும் உதகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இரவு ஒரு மணிக்கு அந்த வாகனத்தின் ஓட்டுநர் சிக்கந்தர் என்பவரை மருத்துவமனையில் `புதிய தலைமுறை’ சார்பில் சந்தித்தோம். அவருக்கு தோளில் அடிபட்டிருந்தது. அவரிடம் பேசுகையில், “உதகைக்கு வந்த அந்த சுற்றுலா பயணிகள், மசினகுடியில் தங்குவதற்கு முடிவு செய்து ஆன்லைனில் பதிவு செய்திருந்தார்கள். உதகைக்கு வந்த அந்த பயணிகளை ரெசார்ட்டை சேர்ந்த ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்து அழைத்து சென்றார். தலைகுந்தா வழியில் சென்றால் காவல்துறையினர் இருப்பார்கள் என்பதால் பழைய கலெக்டர் ஆபீஸ் வழியாக குறுக்கு பாதையில் அழைத்து சென்றிருக்கிறார். அப்பாதையில் காவல்துறை சோதனை சாவடி இல்லை” என்றார்.
image
கல்லட்டி சாலை பற்றிய விழிப்புணர்வு அவர்களுக்கு இல்லையா என்று நாம் கேட்டோம். அதற்கு ஓட்டுநர் சிக்கந்தர் பதிலளிக்கையில் கல்லட்டி சாலை பற்றிய நம்முடைய வீடியோவை நான்கு நாட்களுக்கு முன்பு அவக்ரள் பாரர்த்திருந்ததாக சொன்னார். இந்த சாலையில் போகக் கூடாது என ஊழியர்களில் ஒருவர் தன்னுடைய சக ஊழியர்களிடம் சொல்லியிருக்கிறார் என்றும் சிக்கந்தர் கூறினார். பிரச்னை என்னவென்றால், தாங்கள் செல்லுகின்ற பாதை கல்லட்டி பாதை என்பது அவருக்கு தெரியாமல் இருந்திருக்கிறது. அந்தவகையில் இந்த விபத்திற்கு முக்கிய காரணம் ரெசார்ட் சேர்ந்தவர்கள் தான் என்று சொல்லப்படுகிறது.
பழைய வீடியோவை இங்கு காணலாம்: 

அந்தப் பாதையில் சிக்கந்தர் செல்கையில், அவர் இரண்டாவது கியரில் சென்றிருக்கிறார். மழை என்பதாலும் புதிய பாதை என்பதாலும், பிரேக்கை அடிக்கடி பயன்படுத்தி இருக்கிறார் அவர். பதினைந்தாவது வளைவிற்கு செல்லும் போது, வாகனம் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. விபத்து நடந்த இடத்தில், ஒருவேளை அவர் பிரேக் பிடித்திருந்தால் டயரின் தடம் சாலையில் அங்கு பதிந்திருக்கும். இதையறிய நாம் அங்கு சென்று பார்த்தோம். அப்போது அப்படியான எந்த தடயமும் இல்லை. ஒரு 500 மீட்டர் தூரத்தை கடந்திருந்தால் வனத்துறை சோதனை சாவடியில் அந்த வாகனம் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
image
கல்லட்டி சாலையை பொறுத்தவரை, இரவு 9 மணிக்கு அதை மூடி விடுவார்கள். மீண்டும் காலை ஆறு மணிக்கு மட்டுமே திறப்பார்கள். இதை மனதில்வைத்து, இரவு 9 மணிக்கு முன்பே அங்கிருந்து வெளியேறி சென்றுவிட வேண்டும் என்பதால் ஓட்டுநர் வேகமாக வாகனத்தை இயக்கி இருக்கலாம் என கணிக்கப்படுகிறது. இதுமட்டுமன்றி, `கல்லட்டி சாலையில் டெம்போ டிராவல் வாகனங்கள் முற்றிலும் தடை செய்யப்பட்டிருக்கிறது’ என உள்ளூர் வாகன ஓட்டிகள் கூறுகிறார்கள். இப்படியாக சாலை குறித்த விழிப்புணர்வு இல்லாத உள்ளுரை சேர்ந்த நபர்களால் தான் பல விபத்துகள் நடந்துள்ளதாகக்கூறி இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர் மக்கள்.
மக்கள் அளித்த தகவலின்பேரிலும், விபத்தில் சிக்கி மீண்டவர்களின் வாக்குமூலத்தின் பேரிலும் கல்லட்டி மலைப்பாதையில் அமைந்துள்ள தங்கும் விடுதியின் உரிமையாளர் வினோத் குமார் மற்றும் அவரது உதவியாளர் ஜோசப் ஆகிய இருவர் மீது (விடுதிக்கு தடையை மீறி சுற்றுலா வேனை அழைத்து சென்று விபத்திற்கு காரணமாக இருந்ததாக) உதகை புதுமந்து காவல் நிலைய குற்ற எண் 40/22 u/s 279, 337, 338, 304(A) பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இந்த சாலை குறித்த விழிப்புணர்வு மக்களிடம் ஏற்படாத வரை இப்படியான விபத்துகளை தடுப்பது மிகவும் கடினம்தான்.
-ஜார்ஜ் அந்தோணிSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.