'அரசியல் சாசனத்துக்கு மட்டுமே கட்டுப்பட்டது நீதித்துறை' – தலைமை நீதிபதி என்.வி.ரமணா

“அரசியல் சாசனத்துக்கு மட்டுமே நீதித் துறை கட்டுப்பட்டது,” என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்து உள்ளார்.

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமெரிக்கா சென்றுள்ளார். சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய – அமெரிக்கர்கள் சங்கத்தின் சார்பில் நடந்த நிகழ்ச்சியில், தலைமை நீதிபதி என்.வி.ரமணா பேசியதாவது:

நாட்டின், 75வது சுதந்திர தினத்தைக் கொண்டாடி வருகிறோம். அது போல குடியரசு பெற்று, 72 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளோம். ஆனாலும், அரசியல் சாசனம் ஒவ்வொரு அமைப்புக்கும், ஒவ்வொரு தனிநபருக்கும் வரையறுத்துள்ள கடமைகள், பொறுப்புகளை நாம் இன்னும் உணர்ந்து கொள்ளவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது.

ஆட்சியில் இருக்கும் அரசியல் கட்சிகள், தங்களுடைய அனைத்து நடவடிக்கைகளுக்கும், நீதிமன்றங்கள் ஒப்புதல் அளிக்கும் என்று நினைக்கின்றன. அதே நேரத்தில், தங்களுடைய அரசியல் வளர்ச்சிக்கு தீர்ப்புகள் உதவும் என்று எதிர்க்கட்சிகள் நீதித்துறையிடம் எதிர்பார்க்கின்றன. அரசியல் சாசனம் குறித்த சரியான புரிதல் இல்லாததாலேயே, இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

இதனால் நீதித் துறை மட்டுமே தன்னை காப்பாற்றும் என்று நம்பியுள்ள மக்களுக்கு சில தயக்கங்கள் ஏற்பட்டுள்ளன. அரசியல் சாசனத்துக்கு மட்டுமே நீதித் துறை கட்டுப்பட்டது. இதில் எந்த சமரசமும் இல்லை. இதை உறுதியாக தெரிவிக்கிறேன். இது குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

அரசியல் சாசன அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் தங்களுடைய கடமைகளை, பொறுப்புகளை புரிந்து கொள்ள வேண்டும். ஜனநாயகம் என்பது அனைவரின் பங்களிப்பு உடையதாக இருக்க வேண்டும். வேற்றுமையில் ஒன்றுமையை கடைபிடிக்கும் நாடுகள் என்ற பெரிய ஒற்றுமை அமெரிக்கா மற்றும் இந்தியாவுக்கு உள்ளது. அனைத்து தரப்பினரும் இணைந்து செயல்பட்டால் மட்டுமே வளர்ச்சியைக் காண முடியும். நம்மை ஒன்றுபடுத்தக் கூடிய விஷயங்களையே நாம் பார்க்க வேண்டும்; பிரிவு ஏற்படுத்தும் பிரச்னைகளை தூர எறியுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.