கடந்த 23ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தின் மூலம், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகி விட்டதாக, எடப்பாடி பழனிசாமி தரப்பு தொடர்ந்து சொல்லிக் கொண்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக எடப்பாடி கே பழனிசாமி, ஒ பன்னீர்செல்வத்திற்கு எழுதிய கடிதத்தில் தங்களுடைய ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகிவிட்டதாக குறிப்பிட்டிருந்தார். தொடர்ந்து டுவிட்டர் பக்கத்திலும் எடப்பாடி பழனிசாமி தான் இணை ஒருங்கிணைப்பாளர் இல்லை என்பதை குறிக்கும்படி சுயவிவரத்தில் திருத்தம் செய்திருந்தார்.
இந்நிலையில், இன்று ஓ பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான வைத்தியலிங்கம் வெளியிட்ட அறிவிப்பில், ‘அதிமுகவின் இரட்டை தலைமை சர்ச்சையில் உள்ளதால், அடுத்த நிலையில் உள்ள பொருளாளருக்கு தான்; அதாவது ஓ பன்னீர் செல்வத்துக்கு தான் அதிமுகவின் கட்சியை வழிநடத்தும் அதிகாரம் உள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.
அதன்படி பார்த்தால், அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலியாகிவிட்டதை உறுதி செய்து உள்ளாரா வைத்திலிங்கம் என்ற சந்தேகம் பரவலாக எழுந்துள்ளது.
மேலும் வைத்திலிங்கம் தெரிவிக்கையில், ‘அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்திற்கு அதிமுக தலைமை கழகத்தின் பெயரில் அழைப்பு விடுப்பது ஏற்புடையது அல்ல. பொருளாளர் ஓபிஎஸ் ஒப்புதல் இல்லாமல் தலைமை கழக நிர்வாகிகள் பொதுக்குழு கூட்டத்தை கூட்ட முடியாது.
அப்படியே,பொதுக்குழு கூட்டத்திற்கு அழைப்பிதழ் அனுப்பி, அனைத்து ஏற்பாடுகளும் செய்தாலும், வருகின்ற 11ஆம் தேதி பொதுக்குழு நடக்க வாய்ப்பே இல்லை’ என்று வைத்திலிங்கம் தெரிவித்திருக்கிறார்.