ஜெய்ப்பூர்: ராகுல் காந்தி குறித்து போலியான வீடியோ வெளியிட்ட பாஜக எம்பி ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், டிவி தொகுப்பாளர் ரோஹித் ரஞ்சன் ஆகியோர் மீது ேபாலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். கேரள மாநிலம் வயநாடு எம்பி அலுவலகத்தை சேதப்படுத்தியது குறித்த காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கூறிய கருத்தை, உதய்பூரில் நடந்த படுகொலையுடன் தொடர்புபடுத்தி பாஜக எம்பியும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் ேபாலியான வீடியோ ஒன்றை வெளியிட்டார். அவரது இந்த செயலுக்கு காங்கிரஸ் சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.ராகுல்காந்தி தொடர்பாக போலியான விடியோவை பகிர்ந்த ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் உட்பட அந்தக் கட்சியின் தலைவர்கள் பலரும் உடனடியாக மன்னிப்புக் கேட்க வேண்டும் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இந்த வீடியோவின் உண்மைத்தன்மை அறியாமல் தனியார் செய்தி நிறுவனமும் ஒளிபரப்பியது. இவ்விவகாரம் தொடர்பாக ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ராம் சிங் கஸ்வான் என்பவர், ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் மற்றும் செய்தி நிறுவன தொகுப்பாளர் ரோஹித் ரஞ்சன் ஆகியோருக்கு எதிராக போலீசில் புகார் அளித்தார். அதையடுத்து நேற்றிரவு ஜெய்ப்பூர் போலீசார் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், ரோஹித் ரஞ்சன் மற்றும் பலர் மீது எப்ஐஆர் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இருப்பினும், பாஜக தரப்பில் இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை எந்த ஒரு பதிலும் தரப்படவில்லை.