மும்பை: சிவசேனா எம்எல்ஏக்கள் யாருடன் இருக்கிறார்கள் என்பது இன்று தெரிந்து விட்டது என மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே சட்டப்பேரவையில் உத்தவ் தாக்கரேவை கடுமையான தாக்கி பேசினார். மீது சரமாரிக் கேள்வி
மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகியவை இணைந்து மகா விகாஸ் அகாடி என்ற பெயரில் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. இந்நிலையில் சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் அணி தலைவரான ஏக்நாத் ஷிண்டே ஆட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார்.
பாஜக கூட்டணியின் சார்பில் மகாராஷ்டிர முதல்வராக ஏக்நாத் ஷிண்டே பதவியில் அமர்ந்துள்ளார். துணை முதல்வராக பாஜக மூத்த தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்றுள்ளார்.
புதிய அரசு ஜூலை 4-ம் தேதி பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கவுள்ளது. இதனைத் தொடர்ந்து, சட்டப் பேரவைத் தலைவர் பதவிக்கு இன்று தேர்தல் நடைபெற்றது. இந்த கூட்டணி அரசு தரப்பில், மகாராஷ்டிரா பேரவைத் தலைவர் பதவிக்கு பாஜக எம்எல்ஏ ராகுல் நர்வேகர் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
பின்னர் சட்டப்பேரவையில் ஏக்நாத் ஷிண்டே பேசினார். அப்போது உத்தவ் தாக்கரே மற்றும் சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத்தை மறைமுகமாக தாக்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:
இன்றுவரை மக்கள் எதிர்க்கட்சியாக இருந்து அரசின் பக்கம் மாறுவதை பார்த்தோம். ஆனால் இந்த முறை அரசில் பங்கு பெற்றவர்களே எதிர்க்கட்சிக்கு சென்றனர். உத்தவ் தாக்கரே தலைமையிலான மகா விகாஸ் அகாடி அரசை வீ்ழ்த்த அமைச்சர்கள் உட்பட பல எம்எல்ஏக்கள் வெளியேறியது என்னை போன்ற ஒரு சாதாரண தொழிலாளிக்கு மிகப்பெரிய விஷயம்..
பாலாசாகேப் தாக்கரே மற்றும் ஆனந்த் திகே ஆகியோரின் சித்தாந்தத்தில் அர்ப்பணிப்புடன் இருந்த என்னைப் போன்ற ஒரு சாதாரண தொழிலாளிக்கு இது மிகப்பெரிய விஷயம். பல அதிருப்தி எம்எல்ஏக்களுடன் தொடர்பில் இருப்பதாகக் கூறிக்கொண்டு இருந்தனர்.
சிலர், நாங்கள் சில எம்.எல்.ஏ.க்களுடன் தொடர்பில் உள்ளோம், சில சமயங்களில் அது 5, பிறகு 10, 20, மற்றும் 25 என்று கூறிக் கொண்டே இருந்தனர். அவர்களின் கருத்து அல்லது எதிர்பார்ப்பு எதுவாக இருந்தாலும், அது தவறாகிவிட்டது.
நான் எந்தவொரு எம்எல்ஏ.,வையும் வற்புறுத்தி அழைக்கவில்லை. அவர்களாக என்னிடம் வந்தனர். நாங்கள் பாலசாகிப் தாக்கரேயின் கனவை நிறைவேற்றுவோம். எல்லோரும் பட்னாவிஸ் தான் முதல்வர் ஆவார் என நினைத்தனர். நான் முதல்வர் பதவியை விரும்பவில்லை. விதியாக தானாக எனக்கு வந்துள்ளது.
பாஜகவுக்கு 115 எம்எல்ஏக்கள் உள்ளனர். எங்கள் தரப்பில் 50 பேர் உள்ளனர். ஆனாலும் பாஜக பெரிய மனதுடன் எனக்கு முதல்வர் பதவியை வழங்கியது. பிரதமர் மோடி, அமித் ஷா மற்றும் ஜேபி நட்டா ஆகியோருக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். முதல்வர் பதவி வேண்டும் என்ற எந்த எதிர்பார்ப்பும் எனக்கு இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.