மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் இன்று புதிய சபாநாயகரை தேர்ந்தெடுப்பதற்காக சட்டமன்றத்தின் சிறப்புக்கூட்டம் கூடியது. இதையடுத்து கோவாவில் தங்கியிருந்த சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் நேற்று இரவு மும்பைக்கு அழைத்து வரப்பட்டனர். இக்கூட்டத்திற்கு அருகில் உள்ள ஹோட்டல்களில் தங்கவைக்கப்பட்டிருந்த சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் பலத்த பாதுகாப்புடன் சட்டமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டனர். இந்த நிலையில், அதிருப்தி எம்.எல்.ஏ-க்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பிய முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்ய தாக்கரே, “இது போன்ற ஒரு பாதுகாப்பை நான் இதற்கு முன்பு பார்த்ததே இல்லை. ஏன் பயப்படுகிறீர்கள்? யாரும் ஓடிவிடுவார்கள் என்று கவலையா? ஏன் அதிகமாக பயப்படுகிறீர்கள்? சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் இன்றைக்கு வந்துள்ளனர். ஆனால், அவர்களால் எங்களை கண்களால் பார்க்க முடியவில்லை.
எத்தனை நாள்களுக்கு ஒவ்வொரு ஹோட்டலாக சென்று கொண்டிருப்பீர்கள்? ஒரு நாள் இந்த எம்.எல்.ஏ-க்கள் தங்களது தொகுதிக்கு சென்றுதானே ஆக வேண்டும். மக்களை எப்படி சந்திப்பீர்கள்? இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு தேவேந்திர பட்னாவிஸிடம் நாங்கள் சொன்னதைக் கேட்டிருந்தால் இந்த சூழ்நிலை வந்திருக்காது. இரண்டரை ஆண்டுகள் முடிந்து தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகி இருப்பார்” என்று தெரிவித்தார்.
தற்போது சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ராகுல் நர்வேகர் சட்டமேலவை தலைவராக இருக்கும் ராம்ராஜே நிம்பல்கரின் மருமகன் என்பதோடு, நாட்டிலேயே மிகவும் இளம் சபாநாயகர் என்பது குறிப்பிடத்தக்கது. புதிய சபாநாயகர் தேர்வுக்குப் பிறகு நிருபர்களுக்கு பேட்டியளித்த துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், “மகாராஷ்டிரா மக்களின் எதிர்பார்ப்புகளை ஷிண்டே தலைமையிலான அரசு பூர்த்தி செய்யும். இதற்கு புதிய சபாநாயகர் முழு ஒத்துழைப்பு கொடுப்பார்” என்று நம்புவதாக குறிப்பிட்டார்.