தாம்பத்திய உறவு தொடர்பான இரண்டு கேள்விகள் எப்போதும் இருந்து கொண்டே இருக்கின்றன. ஒன்று, ‘எந்த நாள்களில் உறவு கொண்டால் கருத்தரிக்க மாட்டோம்; எந்த பொசிஷனில் வைத்துக் கொண்டால் கருத்தரிக்க மாட்டோம்….’ புதிதாகத் திருமணமானவர்களும், திருமணமாகி ஒன்று அல்லது இரண்டு குழந்தை பெற்றவர்களும் இந்தக் கேள்வியைக் கேட்கிறார்கள்.
இரண்டாவது கேள்வி, ‘எந்த நாள்களில் உறவு கொண்டால் கருத்தரிப்போம்; எந்த பொசிஷனில் உறவு கொண்டால் சீக்கிரம் கருத்தரிப்போம்.’ இது, திருமணமாகி குழந்தைக்காகக் காத்திருக்கும் தம்பதியரின் கேள்வி. சீக்கிரம் கருத்தரிப்பதிலும், கருத்தரிப்பைத் தள்ளிப்போடுவதிலும் நாள்களுக்கும் செக்ஸ் பொசிஷன்களுக்கும் தொடர்பிருக்கிறதா? பாலியல் மருத்துவர் காமராஜ் சொல்வதைக் கேளுங்கள்.
”இந்த முறைகள் எதுவுமே முழுமையான பலனளிக்காது. கர்ப்பமாக வேண்டுமென்றால், பீரியட்ஸ் முடிந்ததும், தினமும் அல்லது ஒருநாள் விட்டு ஒருநாள் தாம்பத்திய உறவு கொள்ள வேண்டும். சம்பந்தப்பட்ட தம்பதியருக்கு ஏற்ற அல்லது பிடித்த எந்த பொசிஷனில் வேண்டுமானாலும் அதை வைத்துக் கொள்ளலாம்.
கருத்தரிப்பைத் தள்ளிப்போட வேண்டுமென்று நினைப்பவர்கள், மாத்திரை, ஆணுறை, காப்பர் டி என்று உங்களுக்கு வசதியான ஒரு கருத்தடை முறையைப் பயன்படுத்தினாலே போதும்.
காலண்டர் மெத்தடு, பொசிஷன், புல் அவுட்… இவையெல்லாம் முழுமையான பலன் தராது என்பதுதான் உண்மை. பீரியட்ஸுக்கு பிறகு தேதிகளைக் கணக்கிட்டு உறவுகொள்வது, பொசிஷன், புல் அவுட் போன்றவற்றை நம்பி உறவுகொள்கிற நூறு பெண்களில் 50 அல்லது 60 பேர் கர்ப்பமாகி விடுகிறார்கள்.
‘இதோ புல் அவுட் செய்துவிடலாம்’ என்று நினைக்கிற நேரத்தில் கணவரை மீறி இஜாகுலேஷன் நிகழ்ந்து விடும். அதிலும், முதலில் வெளிவருகிற சில சொட்டுகளில்தான் விந்தணுக்கள் அதிகமாக இருக்கும். எந்த பொசிஷனில் செய்தாலும் இது நிகழ்ந்துவிடலாம்.
குழந்தை வேண்டுமென்பவர்கள். நாள் கணக்கு பார்க்காமல் தொடர்ந்து உறவில் ஈடுபடுங்கள். ஏனென்றால், இளம் பெண்களில் 40 சதவிகிதம் பேருக்கு ஒரு மாதத்தில் இரண்டு அல்லது மூன்று தடவைகூட கருமுட்டை வெளிவரும். முதல் கரு முட்டை 15-ம் தேதியில் வந்தால், இரண்டாவது கருமுட்டை 20-ம் தேதியிலும், மூன்றாவது கருமுட்டை 24-ம் தேதியிலும் வரலாம். ‘என்னுடைய பீரியட்ஸ்படி 20-ம் தேதிக்கு மேல் கருத்தரிக்க மாட்டேன்’ என்று நினைத்து உறவைத் தவிர்த்தீர்களென்றால் கருவுறும் வாய்ப்பை இழந்துவிடுவீர்கள்.
இதேபோல, குழந்தை வேண்டாம் என்பவர்கள். 24-ம் தேதியில் கருமுட்டை வராது என்று நம்பி உறவு கொண்டால் கருத்தரித்துவிடுவார்கள். நாள்களும், பொசிஷன்களும் காலங்காலமாகச் சொல்லப்பட்டு வந்தவை என்றாலும், சம்பந்தப்பட்ட நபர்களைப் பொறுத்து இவை மாறுபடும் என்பதை நினைவில் கொள்வது நல்லது” என்கிறார் டாக்டர் காமராஜ்.