வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஜம்மு: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதி வழியாக ஊடுருவ நூற்றக்கணக்கான பயங்கரவாதிகள் காத்திருப்பதாக உளவுத்துறையினர் எச்சரித்துள்ளனர். இதனையடுத்து ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக உளவுத்துறை வட்டாரங்கள் கூறுகையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்படும் பயிற்சி முகாம்களில் இருந்து, ஜம்மு காஷ்மீருக்குள் ஊடுருவ 200க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் காத்திருக்கின்றனர். அவர்களின் முயற்சியை முறியடிக்க ராணுவத்தினர் மற்றும் எல்லை பாதுகாப்பு படையினர் ரோந்து பணியை முடுக்கி விட்டுள்ளனர். அவர்கள் ஊடுருவும் அனைத்து வழிகளும் கண்டறியப்பட்டுள்ளதால், தற்போது அவர்கள் சுரங்கம் அமைத்தும், நதிகள் மூலமாகவும் ஊடுருவ முயற்சி செய்யலாம். பயங்கரவாதிகளுக்கு லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ்இ முகம்மது, ஹிஸ்புல் முஜாகிதீன் ஆகிய பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு உள்ளது.
பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சி பெரும்பாலும் தோல்வியடைந்த நிலையில் ஒரு சிலர் உள்ளே நுழைந்துள்ளனர். கடந்த ஜன.,1 முதல் ஜூன் 28 வரை 121 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். அதில் 68 பேர் லஷ்கர் அமைப்பையும், 29 பேர் ஜெயிஷ் இ முகம்மது அமைப்பையும், 16 பேர் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பையும் சேர்ந்தவர்கள். ஒருவன் ஐஎஸ் அமைப்பை சேர்ந்தவன். 7 பேரின் அடையாளம் தெரியவில்லை. ஊடுருவல் முயற்சிகளும் தொடர்ந்து குறைந்து வருகிறது. 2019ல் 130 , 2020 ல் 36, 2021ல் 31 ஊடுருவல் முயற்சிகள் நடந்தன.
கடந்த ஆண்டு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட்ட பிறகு, எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் பொதுவாக அமைதி நிலவி வருகிறது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
Advertisement