`ஒழுங்கீனமாக இருந்தால், சர்வாதிகாரி போல் நடவடிக்கை எடுப்பேன்’- முதல்வர் ஸ்டாலின் உரை!

நாமக்கல்லில் நடைபெற்று வரும் நகர்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், “நீங்கள் (உள்ளாட்சி பிரதிநிதிகள்) இந்த இடத்திற்கு வந்துள்ளீர்கள் என்றால் அது சாதாதணமானது அல்ல. உங்கள் உழைப்பு, உங்கள் திறமை, உங்கள் தியாகம் போன்றவையே அதற்கு காரணம். இங்கு ஆண்களை விட பெண்களே உள்ளாட்சி பொறுப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள். உள்ளாட்சி அமைப்புகள் மக்களாட்சியின் உயிர் நாடி. மக்கள் பணியில் முதல் பணி என்பது உள்ளாட்சிகள். இங்குதான் மக்கள் பணியாற்ற பயிற்சியும், வாய்ப்பும் கிடைக்கும். திமுகவை பொறுத்தவரை நின்றால் மாநாடு, நடந்தால் ஊர்வலம். அனைத்து வளங்களையும் கொண்ட மாவட்டமாக நாமக்கல் மாவட்டம் விளங்கி வருகிறது. தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளும் வளர்ச்சி பெற வேண்டுமானால் அது உள்ளாட்சி பிரதிநிதிகளின் கையில் தான் உள்ளது.
image
பள்ளி படிப்பை விட அரசியல் படிப்பில் தான் அதிக விஷயங்கள் இருக்கிறது. இதில் இருப்பவர்கள் மக்கள் பணியாற்றவே ஆர்வம் காட்டிவர வேண்டும். பொறுப்புகள் என்பது உடனடியாக கிடைத்து விடாது. அதற்காக காத்திருக்க வேண்டும். ஒரு பொறுப்பு உங்களை தேடி வந்திருக்கிறது என்றால், அதை தக்க வைத்து கொள்வதும் தொடர்ந்து நீடிப்பதும் உங்கள் கையில் தான் உள்ளது. இன்று நமது செய்கைகள் வழியாகத்தான் கோடிக்கணக்கான மக்கள் பல்வேறு திட்டங்களால் பயன்பெற்றுள்ளனர். அதற்கு காரணம் நான் இட்ட ஒரே கையெழுத்து தான். அத்தகைய சக்தி படைத்த கையெழுத்தை மக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்கு பயன்படுத்துங்கள்.

#LIVE: நாமக்கல்லில் நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாட்டில் சிறப்புரை https://t.co/wW58vECtEo
— M.K.Stalin (@mkstalin) July 3, 2022

எந்தவொரு பிரதிநிதியுமே, மக்கள் பணியாற்றுவதன் மூலமே அவர்களின் பாராட்டை பெற முடியும். அதற்கு நீங்கள் மக்கள் பணி செய்திட வேண்டும். மாநாட்சி மேயர் முதல் வார்டு உறுப்பினர்கள் வரை எந்தவித குற்றச்சாட்டுக்கு ஆளாகமல் பணியாற்ற வேண்டும். அது தான் இந்த மாநாட்டின் நோக்கம். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கட்சி ரீதியாக மட்டுமல்லாமல் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
image
ஒழுங்கீனமாகவோ, முறைகேடாகவோ நடந்து கொண்டால் நான் சர்வாதிகாரி போல் நடவடிக்கை எடுப்பேன். உள்ளாட்சி பிரதிநிதிகள் தங்களுக்குள் உள்ள பிரச்சனைகளையும், விருப்ப வெறுப்புகளை மறந்த விட்டு ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும்” என்று பேசினார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.