ராணுவத்தில் ஆள்சேர்ப்பதற்கான மத்திய அரசின் `அக்னிபத்’ திட்டத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். வட மாநிலங்களில் இளைஞர்கள் இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், மத்திய அரசு இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் உறுதியாக இருக்கிறது. தற்போது இரண்டு லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த திட்டத்தின் கீழ் விமானப்படையில் சேர்வதற்கு விண்ணப்பித்திருக்கின்றனர்.
இந்த நிலையில், அக்னிபத் திட்டத்தின் கீழ் இளைஞர்கள் ராணுவத்தில் சேர்வதற்கான வழிகாட்டல் மற்றும் பயிற்சி முகாம்களை பா.ஜ.க-வினர் நடத்தத் தொடங்கியுள்ளனர்.
அந்த வகையில், இரண்டு நாள்கள் பயிற்சி முகாமை பா.ஜ.க-வினர் மதுரையில் நேற்று தொடங்கினர்.
மதுரை பொன்மேனியில் இந்தப் பயிற்சி முகாமை மாநகர் மாவட்டத் தலைவர் டாக்டர்.சரவணன் தொடங்கி வைத்தார். பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்கப்பெருமாள் அக்னிபத் திட்டம் குறித்து விளக்க உரையாற்றினார்.
மாநில பேரிடர் மேலாண்மை மீட்பு குழு உறுப்பினர் ராஜ்குமார், தேசிய அத்லெடிக் பயிற்சியாளர்கள் அனு அப்சரா, ராஜேஷ், நித்யா ஆகியோர் மாணவ மாணவிகளுக்கு உடல் தகுதி பயிற்சி அளித்தனர்.
நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இந்த முகாமில் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர். பா.ஜ.க-வினர் அவர்களுக்கு உணவும், தங்கும் வசதியும் ஏற்பாடு செய்திருந்தனர்.
அக்னிபத் திட்டத்தில் சேருவதற்கு ஆன்லைன் மூலம் விண்ணபிக்க அங்கேயே ஏற்பாடு செய்திருந்தனர். இதேபோல் அனைத்து மாவட்டத்திலும் பயிற்சி முகாம் நடத்த பா.ஜ.க-வினர் திட்டமிட்டுள்ளனர்.