எதிர்க்கட்சிகளின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவை ஆதரிக்கக் கோரி காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியை தொடர்புகொண்டு பேசியதாக செய்தி வெளியான நிலையில், காங்கிரஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது
தற்போது குடியரசுத் தலைவராக உள்ள ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் முடிவடைவதால், புதிய குடியரசுத் தலைவரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் ஜூலை 18 ஆம் தேதி நடைபெறுகிறது.
பாஜக தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் திரௌபதி முர்மு குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்பட்டுள்ளார். அதே போல, எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
பாஜக தனது கூட்டணி கட்சிகளிடம் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்முவை ஆதரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது. திரௌபதி முர்மு மாநிலங்களுக்கு சென்று எம்.எல்.ஏ. மற்றும் எ.பி.க்கள், தலைவர்களை சந்தித்து ஆதரவு கேட்டு வருகிறார்.
அதே போல, எதிர்க்கட்சிகளின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவை ஆதரிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் பாஜக கூட்டணி அல்லாத கட்சிகளிடம் ஆதரவு கேட்டு வருகின்றனர். யஷ்வந்த் சின்ஹாவும் ஆதரவு கேட்டு மாநிலங்களுக்கு பயணம் செய்து வருகிறார்.
இந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவை ஆதரிக்கக் கோரி காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியை தொடர்புகொண்டு பேசியதாக செய்தி வெளியான நிலையில், காங்கிரஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியைத் தொடர்புகொண்டு எதிர்க்கட்சிகளின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவை ஆதரிக்க வேண்டும் என பேசியதாக ஒரு ஆங்கில நாளிதழியில் செய்தி வெளியானது. காங்கிரஸ் திமுகவுடன் கூட்டணியில் உள்ள நிலையில், ராகுல் காந்தி அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியைத் தொடர்பு கொண்டு பேசியதாக வெளியான செய்தி காங்கிரஸ் – திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக, காங்கிரஸ் மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஜெயராம் ரமேஷ், வெளியிட்ட அறிக்கையில், யஷ்வந்த் சின்ஹாவுக்கு ஆதரவு கோரி அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியைத் தொடர்புகொண்டதாக வெளியான செய்தி தவறானது என்றும் குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக இருவரும் தொலைபேசியில் பேசவில்லை என்றும் மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும், திமுக – காங்கிரஸ் கூட்டணி உறுதியாக இருப்பதாக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“