மதுரை: பெண்கள் பாதிக்கப்படாத வகையில் வரிகளை விதிக்கவேண்டும் என, மத்திய அரசுக்கு காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசர் வலியுறுத்தினார்.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் காங்கிரஸ் பிரமுகர் இல்ல விழாவில் திருச்சி மக்களவை காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசர் இன்று பங்கேற்றார். இதன்பின், அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: ”எந்த பொருளாக இருந்தாலும், மத்திய அரசு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கிறது.
தற்போது, பால், தயிர் போன்ற சமையல் பொருட்களுக்கும் வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பெண்கள் பொருளாதார ரீதியில் சிரம்மப்படுகின்றனர். ஏழை, நடுத்தர, சம்பளம் பெறுவோர் என, பலதரப்பட்ட மக்களும் பாதிக்காத வகையில் வரி வகைகள் இடம் பெறவேண்டும்.
நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும் என, தமிழகத்திலுள்ள காங்கிரஸ் போன்ற எதிர்க் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்துகிறது. இத்தேர்வை ரத்து செய்வோம் என, தேர்தல் நேரத்தில் திமுக வாக்குறுதி கொடுத்தது உண்மைதான். அதற்கான நடவடிக்கையை மாநில அரசும் எடுக்கிறது.” இவ்வாறு அவர் கூறினார்.
மதுரை மாநகர மாவட்ட தலைவர் கார்த்திகேயன், மாநில செயற்குழு உறுப்பினர் சையது பாபு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.